தமிழகத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரத்து 833 மெட்ரிக் டன் சர்க்கரையை கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வரை ஒதுக்கி வந்தது. இந்த சூழ்நிலையிலும் மாதத்துக்கு 37 ஆயிரத்து 163 மெட்ரிக் டன் சர்க்கரையை ரேஷன் கடைகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.13.50 என்ற விலைக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தியது. அந்த சட்டப்படி, வறுமை கோட்டுக்கு கீழ் வருபவர்கள் (பிபிஎல்), அந்த்யோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) திட்ட பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
தற்போது மானிய விலையில் சர்க்கரை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. அதன்படி, பொதுவினியோக திட்டம் மூலம் மானிய சர்க்கரையை ஏஏஒய் பிரிவினருக்கு மட்டுமே அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பிரிவில் வரும் குடும்பத்தினருக்கு ஒரு கிலோ சர்க்கரை ரேஷன் கடையில் வழங்கப்படும்.
இதனால், ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் 1.11.17 முதல் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இதுகுறித்த அரசாணையை பிறப்பித்தார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை உணவுப் பொருட்களை லட்சக்கணக்கான மக்கள் நம்பியுள்ளனர். கடைகளில் சர்க்கரை கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் சர்க்கரையை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில், விலையுயர்வு உத்தரவை, தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இந்த விலையேற்றம் சாதாரண உயர்வு தான் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. இதுகுறித்து அவர் கூறுகையில், "வெளிமார்க்கெட்டில் சர்க்கரை ரூ.40-க்கு விற்கப்படுகிறது. எனவே ரூ.25 என்பது சாதாரண உயர்வு தான். மத்திய அரசு அளித்துவந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "ரேஷனில் சர்க்கரை விலையை ரூ.25ஆக உயர்த்தியதை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் தமிழகத்தில் நவ.6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு முன் இந்த போராட்டம் நடத்தப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.