Advertisment

டி.ஜி.பி ராஜேந்திரனை விடுவிக்க உத்தரவிட வேண்டும் - ஆளுநருக்கு 'செக்' வைக்கும் ஸ்டாலின்!

வாக்கி டாக்கி கொள்முதல் விசாரணை முடியும் வரை, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து திரு. டி.கே.ராஜேந்திரனை விடுவிக்க வேண்டும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
டி.ஜி.பி ராஜேந்திரனை விடுவிக்க உத்தரவிட வேண்டும் - ஆளுநருக்கு 'செக்' வைக்கும் ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக பொறுப்பேற்றுள்ள மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள், “தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்”, என்று தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். மேதகு ஆளுநர் அவர்கள் இதுபோன்று கூறியிருக்கின்ற நிலையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பணிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் மிக முக்கியமான தொடர்பு சாதனமாக திகழும் ‘வாக்கி டாக்கி’ கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

செய்திகள் வெளிவந்து மூன்று தினங்கள் கடந்தும், இதுவரை காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி அவர்கள் மவுனமாக காத்து, ‘குட்கா’ வில் தொடர்புடைய அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுத்தது போல், இப்போது ‘வாக்கி டாக்கி’ முறைகேடுகளையும் போர்வைப் போட்டு மூடப் பார்ப்பது வேதனைக்குரியது.

இந்த முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பது எதிர்கட்சிகள் அல்ல, மாநில உள்துறைச் செயலாளராக இருக்கும் திரு. நிரஞ்சன் மார்டி அவர்கள். அவர் டி.ஜி.பி. திரு. டி.கே.ராஜேந்திரன் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெண்டர் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அதன் நகலை முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியிருக்கிறார். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் இந்த ‘வாக்கி டாக்கி ஊழல்’ குறித்த செய்தி, தலைப்பு செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உள்துறைச் செயலாளர் தனது கடிதத்தில், இந்த டெண்டரில் 11 விதிமீறல்கள் இருப்பதாகவும், வாக்கி டாக்கிக்கு 28 சதவீதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு 12 சதவீதமாக குறைக்கப்பட்டாலும், அந்தக் கம்பெனிக்கு 28 சதவீதமாகவே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். “2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் காவல்துறையை நவீனமயமாக்குவதற்கு 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்கிற போது 88 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டது எப்படி?” என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ள உள்துறைச் செயலாளர், “88 கோடி ரூபாய் டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்து கொண்ட நிலையில், அந்த நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது எப்படி? எந்த விதி அதை அனுமதிக்கிறது?”, என்ற மிக முக்கியமான கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்.

இப்படி, மக்களின் பாதுகாப்பிற்காக வாங்கப்படும் “வாக்கி டாக்கி” கொள்முதல் டெண்டர் முறைகேடுகளுக்குக் காரணமான டி.ஜி.பி.யை பாதுகாக்க முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி துடிப்பது ஏன்? இந்த முறைகேடுகள் மீது விசாரணை நடத்தவோ, அல்லது முறைகேடு நடக்கக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வராத முதலமைச்சர், 88 கோடி டெண்டர் ஊழல் குறித்து கேள்வி எழுப்பிய உள்துறைச் செயலாளரை மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மெகா முறைகேட்டில் இருந்து தப்பித்துக் கொள்ள சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யும், மாநில உளவுத்துறை ஐ.ஜி.யும் ‘கூட்டணி’ அமைத்து, ஊழலை தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்றவேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிய வருகிறது. ஊழலை தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்ற, ஒரு டி.ஜி.பி. தலைமையிலேயே அணி அமைத்து செயல்படுவது, ‘வெளிப்படையான நிர்வாகத்திற்கும், தமிழக காவல்துறை அதிகாரிகளை வழிநடத்தும் டி.ஜி.பிக்கும் துளிகூட சம்பந்தம் இல்லை’, என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது.

“வெளிப்படையான நிர்வாகத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்”, என்று இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ள மேதகு ஆளுநர் அவர்கள் தனது முதல் பேட்டியிலேயே கூறியிருக்கின்ற நிலையில், காவல்துறைக்கு “வாக்கி டாக்கி” கொள்முதல் செய்யும் 88 கோடி டெண்டர் முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு மேதகு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்புக்குப் பயன்படும் வாக்கி டாக்கி கொள்முதல் விசாரணை முடியும் வரை சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து திரு. டி.கே.ராஜேந்திரனை விடுவிக்கவும் மேதகு ஆளுநர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

'தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்' என்று ஆளுநர் கூறியதையே வைத்து, வாக்கி டாக்கி கொள்முதல் விசாரணை முடியும் வரை டி.ஜி.பி. பொறுப்பிலிருந்து திரு. டி.கே.ராஜேந்திரனை விடுவிக்க வேண்டும் என ஸ்டாலின் ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறார். புதிய ஆளுநர் இவ்விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Mk Stalin Banwarilal Purohit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment