Advertisment

குஜராத் எல்.எல்.ஏ-க்கள் தங்கும் இடங்களில் ரெய்டு... கூவத்தூரில் நடத்தாதது ஏன்? மு.க ஸ்டாலின்

‘சுதந்திரமான வருமான வரித்துறை’யை கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்தது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை - கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் ரெய்டு செய்யும் வருமான வரித்துறை, சென்னை கூவத்தூர் விடுதியில் 120-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வேடிக்கைப் பார்த்தது ஏன் என்ற கேள்வி இப்போது எழுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தவுடன், சசிகலா சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பிப்ரவரி 8-ம் தேதியன்று 120-க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள்.

கூவத்தூர் விடுதியில் தடபுடலான விருந்துகளும், ஆட்டங்களும் பாட்டங்களும் கொண்டாட்டங்களுமாக, பிப்ரவரி 8 ஆம் தேதியிலிருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பிப்ரவரி 18-ஆம் தேதிவரை குதிரை பேரங்களும் தொடர்ந்தன. கூவத்தூர் விடுதியில் திருமதி சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அடைத்து வைக்கப்பட்டார்கள்.

திடீர் திடீரென்று சசிகலா கூவத்தூர் விடுதிக்குச் சென்று அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். அங்கேயே கூட சில நாட்கள் தங்கி உறுப்பினர்களிடம் பேரம் நடத்தினார். எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி சென்று சந்தித்து பேரம் நடத்தினார். பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், “எங்கள் சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை”, என்று போலீஸில் கூட புகார் கொடுத்து, உயர்நீதிமன்றமே தலையிட்டு போலீஸ் அதிகாரிகளை அனுப்பி விசாரிக்கும் அளவிற்கு நிலைமை மிக மோசமாக அப்போது இருந்தது.

தங்கக்கட்டிகளும், கரன்சி நோட்டுக்களும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தன. ஆனாலும் வருமான வரித்துறையோ, அமலாக்கத் துறையோ கூவத்தூர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கூவத்தூரில் இருந்து தப்பிச் சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் போலீஸில் புகாரே கொடுத்தார். அப்படியும் கூட ‘கூவத்தூர் பேரம்’ குறித்து விசாரிக்க அங்கே மின்னல் வேகத்தில் வருமான வரித்துறை போகவில்லை.

கூவத்தூரில் 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்று கனகராஜ், திரு. சரவணன் ஆகிய இரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘டைம்ஸ் நவ்’ பத்திரிக்கைக்கு வெளிப்படையாகப் பேட்டியளித்த பிறகும் கூட, அந்த இருவரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி இந்த ‘பேரத்தில் கைமாறிய கோடிக்கணக்கான பணம்’ பற்றி கண்டுகொள்ளவில்லை.

புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் போட்டியிடு வதற்காக தன் பதவியிலிருந்து விலகினார். வருமான வரித்துறை உடனே அவரது வீட்டுக்குச் சென்று ரெய்டு செய்தது. ஆனால், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற பேரம்,- ஏன் சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் மீதெல்லாம் வருமான வரித்துறைக்கு எந்தச் சந்தேகமும் எழுவதில்லை.

இவர்களிடம் ரெய்டு நடத்துவதில்லை. எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் ‘கூவத்தூர் கொண்டாட்டத்தை’ எல்லாம் பார்த்து இந்த மாநிலமும் சிரித்தது, நாடும் சிரித்தது. பேரத்தின் உச்சத்தில் கூட வருமான வரித்துறை கூவத்தூர் விடுதியில் ரெய்டு செய்யவில்லை.

ஏனென்றால், ‘சுதந்திரமான வருமான வரித்துறை’யை கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டது.

அதிமுகவின் ஊழலை அரவணைக்கத் தயார் என்பதை வெளிப்படுத்தும் வகையில், ‘ஒன்றுபட்ட அதிமுகவுடன்தான் கூட்டணிக்குத் தயார்’, என்று செய்திகளை கசிய விடுகிறது பா.ஜ.க. ஆகவே, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் ஊழல் ஒழிப்பின் முகத்திரை ‘கூவத்தூரில்’ அனுமதிக்கப்பட்ட ‘எம்.எல்.ஏ.க்கள் பேரத்தால்’ இன்று கிழிக்கப்பட்டு நிற்கிறது என்பதைத்தான், கர்நாடகாவில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் நடக்கும் வருமான வரித்துறை ரெய்டுகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்ற சுதந்திரமிக்க அமைப்புகள் எல்லாம் அவமானத்துக்குரிய கூவத்தூர் பேரத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசால் தூண்டப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற அமைப்புகள் ஒரு தலைப்பட்சமாக, வேண்டாதவர்கள் மீது மட்டுமே ரெய்டு நடத்துவதற்காக இயக்கப்படுவது இந்திய ஜனநாயகத்திற்கோ அல்லது சட்டத்தின் ஆட்சிக்கோ எந்த விதத்திலும் ஏற்றதல்ல.

இப்படிப்பட்ட புகழ்பெற்ற நிர்வாக அமைப்புகளை தானடித்த மூப்பாக பயன்படுத்துவது அரசியல் கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்பிற்கும் விடப்படும் திறந்த வெளி எச்சரிக்கை போல் அமைந்திருக்கிறது. ஆகவே, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Bjp Mk Stalin Dmk Central Government Income Tax Raid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment