பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்!

சேலம் மாணவியை ஏற்கனவே திருச்சி சிறையில் அடைத்து வைத்து நிர்வாண சோதனை செய்தார்கள்

சேலத்தைச் சேர்ந்த வளர்மதி(25) எனும் பெண், கடந்த ஜூலை 12-ம் தேதி கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே “இயற்கை பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகம் செய்தார். அந்த துண்டு பிரசுரத்தில் “மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக ஜூலை 15-ம் தேதி புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்” என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால், வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், “நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து “இயற்கையை காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் போராடி வந்த சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் இந்த “குதிரை பேர” அரசு கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” “கதிராமங்கலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்” என்றெல்லாம் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஒரு பக்கம் வாக்குறுதி கொடுத்து விட்டு, இன்னொரு புறம் ஜனநாயக ரீதியாக போராடும் மாணவி, பேராசிரியர் உள்ளிட்டோர் மீதும், கிராம மக்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வதும், மாணவி என்று கூட பாராமல் குண்டர் சட்டத்தில் அடைப்பதும் தமிழகத்தில் நடப்பது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி” அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

“மக்களின் அங்கீகாரம் பெறாமல்” பதவியிலிருக்கும் இந்த ஆட்சி, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களின் மீது அடக்குமுறையை ஏவி விடுகிறது. தான் தோன்றித்தனமாகவும், அராஜகமாகவும் கைது செய்து குண்டர் சட்டத்தை பிரயோகிக்கிறது. சேலம் மாணவியை ஏற்கனவே திருச்சி சிறையில் அடைத்து வைத்து நிர்வாண சோதனை செய்தார்கள் என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் ஆறு வாரங்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த ஆறு வார காலக்கெடு முடிவதற்குள், அந்த மாணவியை திடீரென்று கைது செய்து, குண்டர் சட்டத்தை பாய்ச்சியிருப்பது “பேய்கள் அரசு செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள்” என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்பு போராடியதற்காக மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது; ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து துண்டு பிரசுரம் கொடுத்ததற்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது; கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட கிராம மக்களை ஜாமினில் விடுவிக்கவே கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காவல்துறை வாதிடுவது- இந்த நடவடிக்கைகள் எல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை விமர்சிப்பவர்கள் மீது இங்குள்ள “குதிரை பேர அரசு” தொடுக்கும் போர் போல் அமைந்திருப்பது மட்டுமின்றி, மனிதாபிமானமற்ற பழிவாங்கும் நடவடிக்கைகளாக இருக்கின்றன. மாணவியை இப்படி குண்டர் சட்டத்தில் கைது செய்யும் மாநிலத்தில் உள்ள சில போலீஸ் அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறார்களா என்ற அடிப்படை கேள்வியே இப்போது எழுந்து விட்டது.

ஆகவே காவல்துறை மூலம் அடக்குமுறையில் ஈடுபடும் போக்கை உடனடியாக இந்த “குதிரை பேர” அரசு கைவிட வேண்டும். சேலம் மாணவி வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோருக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்களை சிறையிலேயே அடைத்து வைக்கும் மனப்பான்மையை மாற்றிக் கொண்டு, அவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

×Close
×Close