தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலை சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், போக்குவரத்துக்கு ஒழுங்கு செய்வதற்காக சில நாட்களுக்குள் அந்த சிலையை எடுத்துவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் சிலையை வைத்துவிடுவோம் என்று தமிழக அரசு தரப்பிலும், பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சிலை அகற்றப்பட்டது. ஆனால் நாட்கள் பல ஆகியும் மீண்டும் நிறுவுவதற்கான எந்த வேலையும் நடக்கவில்லை.
எனவே, தமிழக அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தும், சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், "சென்னை எக்மோரிலிருந்த "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவை தலைவராக பணியாற்றிய அவரது பொன் விழா ஆண்டில் இந்த அராஜகத்தை செய்து அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அவமதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. உடனடியாக திரு சி.பா. ஆதித்தனார் சிலையை அங்கே மீண்டும் நிறுவ வேண்டும். தமிழுணர்வுடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், வைகோ, ஏ.சி,சண்முகம், ஜிகே வாசன் உள்ளிட்டோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.