Advertisment

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசியல் அநாகரீகம்: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு பணத்தை செலவு செய்து தரம் தாழ்ந்த விமர்சனங்களையும், திமுக-வையும் விமர்சித்து வருகிறார்கள்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, AIADMK, Tamilnadu Government, Dengue fever, Minister C vijayabaskar,

உட்கட்சி பிரச்சினை தொடர்பான தரம் தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், திமுகவை விமர்சிப்பதற்கும் அரசு விழாக்களை பயன்படுத்தி, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என ஆளும் அதிமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு பணத்தை செலவு செய்து, தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அரசு விழாக்களில் அரசியல் பேசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருவதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த எம்.ஜி.ஆரின் புகழைப் பாடுவதற்கு பதிலாக தங்களின் புகழ் பாடவும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான தரம் தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், திமுகவை விமர்சிப்பதற்கும் அரசு விழாக்களை பயன்படுத்தி, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவின் கட்சி பணத்தில் கூட்டம் போட்டுப்பேச வேண்டியவற்றை எல்லாம், அரசு விழா என்ற பெயரில் அரசாங்க பணத்தில் 'கட்சி பொதுக்கூட்டங்கள்' போல் போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நாகரீகத்திற்கும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்றரீதியில், அரசு விழாக்களைப் பயன்படுத்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

அதிமுகவின் 'உட்கட்சி சண்டை' குறித்த பிரச்சாரத்திற்கும், திமுகவை திட்டுவதற்கும் அரசு பணத்தை ஒதுக்கீடு செய்யும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், விரயமாகிக் கொண்டிருக்கும் அரசு பணத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை கட்டாயம் வரும் என்பதையும் இந்தநேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது ஒரு புறமிருக்க 'குட்காவை பிடியுங்கள்'என்றால், 'குதிரை பேரம்' செய்ய கர்நாடக மாநிலத்திற்கு போலீஸை அனுப்பி, சட்டம் - ஒழுங்குப் பணிகளில் தீவிர கவனம் செலுத்துவதிலிருந்து தவறியிருக்கிறார் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை - கொள்ளைகள் நடக்கின்றன. பெண்களின் பாதுகாப்பிற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏன், மாவட்ட ஆட்சித் தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றநிலை இந்த ஆட்சியில் ஏற்பட்டு விட்டது. காவல் நிலையங்களில் கொடுக்கும் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்வதில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

'குட்கா மாமூல்' குற்றம் சாட்டப்பட்ட டிஜிபி தலைமைப் பொறுப்பில் இருப்பதால் டிஜிபி அலுவலகத்தில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரை அனைத்து காவல்துறை அதிகாரிகளும், நேர்மையாகவும், திறமையாகவும் வழிகாட்ட தங்களுக்கு ஒரு தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையானது என்று புகழ்பெற்ற தமிழக காவல்துறை, என்றும் இல்லாத அளவிற்கு மிக மோசமான நெருக்கடியில் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டு வருடப் பணி பாதுகாப்பை அனுபவித்துக் கொண்டு, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பணிகளிலும், தமிழக காவல்துறையின் சுதந்திரத்தை காப்பாற்றுவதிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பது, மாநில சட்டம் - ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் அமர்ந்திருக்கும் டி.கே. ராஜேந்திரனுக்கு அழகல்ல.

ஆகவே, அதிமுக அரசின் 'உட்கட்சி விவகாரங்களில்' இருந்து டிஜிபி டி.கே. ராஜேந்திரனும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடனடியாக தங்களை விலக்கிக் கொண்டு, தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment