திமுக எம்எல்ஏ-க்கள் கைதுக்கு கண்டனம்... பொங்கி எழுந்த மு.க ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரியை உடனடியாக அங்கிருந்து பணியிட மாறுதல் செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் கலந்து கொள்ள சென்ற திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ஜூன் 11-ம் தேதி மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி துவக்கவிழாவில் பங்கேற்கப் புறப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, பெரியண்ணன் அரசு மெய்யநாதன் ஆகியோரை தடுத்து நிறுத்தி, கைது செய்துள்ள அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு விழாவை, ஏதோ அதிமுக விழா என்றும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஏதோ அதிமுக தலைமைக் கழக நிதியிலிருந்து செலவு செய்து திறப்பது போலவும் நினைத்துக் கொண்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் புது அரசியல் அநாகரிகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்திருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில் பங்கேற்க இருந்த நிலையில், பொதுமக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்திருப்பது, அவர்களுக்கு வாக்களித்து, தேர்வு செய்த பொது மக்களை கைது செய்வது போன்ற செயல் என்பதை முதலமைச்சர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் நான் துணை முதலமைச்சராக இருந்த போது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒப்புதலுடன், ’புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்’, என அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்த மருத்துவக் கல்லூரியை அப்படியே கிடப்பில் போட்ட அதிமுக அரசு, மீண்டும் “புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்” என்று 25.8.2015 அன்று ஒரு புதிய அறிவிப்பு போல, 110 விதியின் கீழ் வெளியிட்டது.

அப்போதே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி “இது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போதே அறிவிக்கப்பட்ட கல்லூரி”, என்று அறிக்கை விடுத்ததை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவக் கல்லூரியின் துவக்கவிழாவில் பங்கேற்றால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் தான் இந்த கல்லூரி வந்தது என்று பாராட்டி விடுவார்கள் என்ற பயத்திலும், இந்த கல்லூரி கட்டும் ஒப்பந்தம் எடுத்த கான்டிராக்டர் சுப்பிரமணியத்தின் தற்கொலை விவகாரம் குறித்து பேசி விடுவார்கள் என்ற அச்சத்திலும், இப்படியொரு அடக்குமுறையை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையை வைத்து, கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக அரசின் இந்த முறையற்ற நடவடிக்கையை கண்டித்து, வரும் ஜூன் 11-ம் தேதி, மாலை 4 மணிக்கு, புதுக்கோட்டை நகரத்தில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரியை உடனடியாக அங்கிருந்து பணியிட மாறுதல் செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இனி வரும் காலங்களில், அரசு விழாக்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அழைப்பிதழில் இருந்தும், அந்த விழாக்களில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

×Close
×Close