Advertisment

உள்ளாட்சி பணிகளுக்கான நிதி கமிஷனுக்காக செலவு செய்யப்படுகிறதா? அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு ஸ்டாலின் கண்டனம்

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அமைச்சரின் கட்டுப்பாட்டில் சிக்கி ஏற்கனவே ‘ஊழல் மயமாகி’ வருகிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, MK Stalin, Minister SP Velumani, Local body,

மத்திய நிதியாணையம் ஒதுக்கியுள்ள அடிப்படை மானியத்தில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கு செலவழிக்க வேண்டும் எனவும், இந்த நிதி செலவிடும் விவகாரத்தில் அரசியல் தலையீடுகளுக்கு ஆட்படாமல், தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான மின்கட்டணத்தையும், குடிநீர் கட்டணத்தையும் செலுத்தவிடாமல், “மத்திய நிதியாணையம் அளித்துள்ள அடிப்படை மானியத் தொகையை கான்டிராக்டுகள் மற்றும் டெண்டர்களுக்கு முழுவதுமாக பயன்படுத்துங்கள்”, என்று நகராட்சி மற்றும் மாநகரட்சி ஆணையர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் கடுமையான அழுத்தம் கொடுக்கும் அவலநிலை உள்ளாட்சி நிர்வாகத்தில் உருவாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தால் முடங்கிப் போயிருக்கும் உள்ளாட்சி நிர்வாகம், மேலும் ஸ்தம்பித்துவிடும் வகையில் இதுபோன்ற அழுத்தங்களைக் கொடுக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நடவடிக்கைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அமைச்சரின் கட்டுப்பாட்டில் சிக்கி ஏற்கனவே ‘ஊழல் மயமாகி’ வருகிறது. ‘சதவீத ராஜ்யம்’ வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவிற்கு உள்ளாட்சித் துறையில் கொடி கட்டிப் பறக்கிறது. அமைச்சரின் ‘கமிஷனுக்கு’ உடன்படாத அதிகாரிகள், அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தாலும் உடனடியாக பந்தாடப்படும் சூழ்நிலை உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி ஆணையம், அடிப்படை மானியம் மற்றும் செயலாக்க மானியம் என்று இருவகை மானியங்களை வழங்கி வருகிறது. 14 வது மத்திய நிதியாணைய பரிந்துரையின் அடிப்படையில் 2015-16 முதல் 2019-20 ஆகிய ஐந்தாண்டு காலத்திற்கு, தமிழகத்திற்கு இந்த இருவகை மானியங்களின் மூலம் 8 ஆயிரத்து 777 கோடி ரூபாய் வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இதனடிப்படையில், 2015-16 ஆம் ஆண்டிற்கு 947.65 கோடி ரூபாயும், 2016-17 ஆம் ஆண்டிற்கு 1312.19 கோடி ரூபாயும் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. 2017-18 ஆம் ஆண்டிற்கான 1390 கோடி ரூபாய் அடிப்படை மானியமும் ஒதுக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், 2017-18 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியத்தில் நகராட்சிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் முதல் தவணையாக கடந்த 22.9.2017 அன்று மாநில நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்படி, மாநகராட்சிகளுக்கு 252.79 கோடி ரூபாயும், நகராட்சிகளுக்கு 195.91 கோடி ரூபாயும் அடிப்படை மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 448.70 கோடி ரூபாயை நிலுவையில் உள்ள மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்தை முதலில் இந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் செலுத்த வேண்டும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நகராட்சி நிர்வாக ஆணையர் எழுதியுள்ள 27.9.2017 தேதியிட்ட கடிதத்தின் மூலம், “நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை முழுவதும் செலுத்தி அதன் விபரத்தினை உடனடியாக தெரிவிக்க வேண்டும்”, என்று அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரோ, “கான்டிராக்ட் பணிகளுக்கு இந்த நிதியை முழுவதும் பயன்படுத்துங்கள்”, என்று நெருக்கடி கொடுக்கிறார். மத்திய நிதியாணையம் ஒதுக்கியுள்ள அடிப்படை மானியத்தை செலவு செய்வதில், உள்ளாட்சித் துறை அமைச்சரின் இத்தகைய குறுக்கீட்டால், இன்றைக்கு தங்கள் நகராட்சிக்குட்பட்ட மக்களின் குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்டவற்றின் கட்டணங்களை செலுத்த முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நகராட்சியின் சுகாதாரத்திற்கு குடிநீர், கழிவு நீர் அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் மிக முக்கியம். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சரின் “டெண்டர் திருவிளையாடல்களுக்கும்”, “கமிஷன் மற்றும் கலெக்சனுக்கும்” மத்திய நிதியாணையம் ஒதுக்கியுள்ள அடிப்படை மானியத்தை திசைதிருப்பும் நடவடிக்கைகளால், இந்த அடிப்படைப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெங்கு பீதியில் மக்கள் உறைந்து போயிருக்கும் நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை டெண்டர்களுக்கு திருப்பி விடுங்கள் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வற்புறுத்துவது வேதனையானது.

ஆகவே, ஊராக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் அரசு செயலாளர்கள் உடனடியாக இதில் தலையிட்டு, மத்திய நிதியாணையம் ஒதுக்கியுள்ள அடிப்படை மானியத்தில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கு செலவழிக்க வேண்டும் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிதி ஆதாரத்தை “கமிஷன்களுக்காக” செலவிடப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதால், இந்த நிதி செலவிடும் விவகாரத்தில் அரசியல் தலையீடுகளுக்கு ஆட்படாமல், தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk Minister Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment