அண்ணன் வைகோவை எப்படி கைது செஞ்சீங்க? சீறும் ஸ்டாலின்!

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு நாளை (ஜூன் 10) சனிக்கிழமை மாலை பினாங்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, மலேசிய விமான நிலையத்திலேயே தடுத்தி நிறுத்திய அதிகாரிகள், மலேசியாவிற்குள் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் என்று கூறி அவரை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்களை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பதற்கு, தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பினாங் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்கள் இல்லத் திருமணத்திற்கு சென்றவரை ‘ஆபத்தானவர்’ என்றெல்லாம் கூறி முறைப்படி விசா பெற்றுச் சென்றவரை மலேசிய அரசு கைது செய்து, தனி அறையில் வைத்திருப்பது மனித உரிமை மீறல் மட்டுமின்றி, அத்துமீறலும் அராஜக நடவடிக்கையுமாகும்.

இந்தியப் பாராளுமன்றத்தில் பல ஆண்டுகள் உறுப்பினராக இருந்து, ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் அண்ணன் வைகோ அவர்களின் கைது பற்றி மத்திய அரசும் உடனே தலையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கிறது. ஆகவே இந்திய வெளியுறவுத்துறை, மலேசிய தூதரக அதிகாரிகளை அழைத்து அண்ணன் வைகோ அவர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரைக் கௌரவமாக நடத்திட தக்க நடவடிக்கைகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close