Advertisment

நவோதயா பள்ளிகள்: பாஜக-வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பாஜக மற்றும் அதிமுக அரசுகள் கூட்டணி வைத்து, மீண்டுமொரு மொழிப் புரட்சிக்கு வித்திட வேண்டாம் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
navodhaya schools, dmk

தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளைக் கொண்டுவரத் திட்டமிடும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகளைக் கொண்டுவரத் திட்டமிடும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் கல்வி அதிகாரத்தை பறித்துக்கொண்டு, ஒரு மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் கூட என்ன கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் மத்திய அரசு பறித்துக் கொள்ளத் துடிப்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கே துரோகம் இழைக்கும் செயல்.

இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்திரவிட்ட வழக்கில், உறுதியுடன் இருமொழிக் கொள்கையை எடுத்து வைக்காமல் அலட்சியம் காட்டிய குதிரை பேர அதிமுக அரசுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி நிர்வாகத்தில் உள்ள நவோதயா வித்யாலயா சமிதி என்ற அமைப்பின் மூலம் நடத்தப்படும் ஜவஹர் வித்யாலாயா பள்ளிகளில், முழுக்க முழுக்க இந்தி மொழிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆறாம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை தமிழில் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தாலும், கட்டாயம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

இந்தப் பள்ளிகளை இயக்கும் தலைமையகமான நவோதயா வித்யாலயா சமிதி உத்தரப் பிரதேச மாநிலப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்தி வாரம் என்று செப்டம்பர் 14 முதல் 28 ஆம் தேதி வரை கட்டாயம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தப் பள்ளிகளைத் தொடங்க தமிழகத்தில் அனுமதித்தால், கிராமங்கள்தோறும் இந்தி விழா கொண்டாட்டம் படு விமரிசையாக நடக்கும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள தலைமையகத்துடன் தமிழகத்தில் உள்ள எந்த நவோதயா பள்ளியாக இருந்தாலும் அலுவல் மொழியான இந்தியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். கடிதப் போக்குவரத்துகள் இந்தியில் இருக்கும். இந்தி புத்தகங்கள் 50 சதவீதம் வாங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆங்கிலம் - இந்தி அகராதி வைத்திருக்க வேண்டும். இந்தி தெரிந்தவர்கள் ஊழியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அப்படியில்லையென்றால், இந்தியில் அலுவலகப் பணியாற்ற பயிற்சியளிக்கப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல விரும்பினால், நிச்சயம் இந்தியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

மேலும், இந்தப் பள்ளிகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஆறாம் வகுப்பிற்கே நுழைவுத் தேர்வை மத்திய அரசு இதன் மூலம் புகுத்த விரும்புகிறது. ஒன்பதாம் வகுப்பில் காலியிடங்கள் இருந்தால் அதற்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கிறது. அந்தத் தேர்வுக்கான நூறு மதிப்பெண்களில் இந்திக்கு 15 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மாணவர்கள் எப்படி இந்த 15 மதிப்பெண்களைப் பெற முடியும்?

திராவிட முன்னேற்றக் கழக அரசு கொண்டு வந்த இரு மொழிக் கொள்கை மற்றும் பள்ளிகளில் தமிழ் மொழிக் கல்விக் கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிராக, இந்திமயமான பள்ளிகளை அமைக்க முயற்சி செய்கிறார்கள். மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திணிக்க மத்தியில் உள்ள பாஜக அரசு துடிப்பதும், அதற்கு இங்குள்ள தமிழ் விரோத அதிமுக அரசு துணைபோவதும் வேதனையாக இருக்கிறது.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படும் என்று இருந்தாலும், இந்தப் பள்ளியின் மொழிக் கொள்கை மும்மொழித் திட்டம் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் கற்க வேண்டிய சூழல் உள்ளது. கிராமப்புற கல்வி முன்னேற்றம், வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக இந்தப் பள்ளிகள் 1986-ல் வகுக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் அறிமுகம் செய்யப்பட்டவை.

ஆனால் நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்களின் கனவைச் சிதைத்து, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, தீவிர இந்தி திணிப்பில் ஈடுபட்டுள்ள மத்தியில் உள்ள பாஜக தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டுவது, கேழ்வரகில் நெய் வடிகிறது பாருங்கள் என்பது போல் இருக்கிறது.

ஆகவே, மத்திய பாஜக அரசு மாநிலத்தில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு விரோதமாகவும் ஜவஹர் வித்யாலயா பள்ளிகளை திறக்கும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும். உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்தில் பாஜக அரசுக்கு அக்கறை இருக்குமென்றால், மாநில அரசுக்கு வழங்கும் கல்வி நிதியுதவியை அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக, அரியலூர் அனிதாவைப் பலி கொண்ட மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து, நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் தமிழக சட்டமன்றத்தின் இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெற்றுக் கொடுங்கள்.

அதை விடுத்து, மிகப்பெரிய மொழிப் போராட்டத்தின் விளைவாக, எண்ணற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உயிர்த் தியாகத்தில் உருவான இருமொழிக் கொள்கைக்கும், தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படும் என்றால், அதை தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், திமுக தொண்டர்களும் தங்களது இன்னுயிரை கொடுத்தாவது தமிழ் மொழிக் காப்பார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டபோது, இது அரசின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடைபெற்ற தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு, அரசின் கல்விக் கொள்கை முடிவு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யாமல் இருக்கும் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜக மற்றும் அதிமுக அரசுகள் கூட்டணி வைத்து, மீண்டுமொரு மொழிப் புரட்சிக்கு வித்திட வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Dmk Mk Stalin Navodhaya Schools Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment