Advertisment

மோடி தொடங்கிய திட்டத்தை சீர்குலைக்கவே 49 மீனவர்கள் கைது : மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்களை தாக்கிக் கைது செய்து, அவர்களது படகுகளை மோதி மூழ்கடித்திருக்கும் இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

மீனவர்களின் படகுகளை முட்டி மோதி நாசப்படுத்துவது, பறிமுதல் செய்து இலங்கை சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று இந்திய அரசு, அந்நாட்டு பிரதமரிடமோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரிடமோ கண்டிப்புடன் சொல்ல வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 41 மீனவர்கள், ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் என்று மொத்தம் 49 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையின் அராஜக நடவடிக்கைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அராஜகமாக கைது செய்தது மட்டுமின்றி தமிழக மீனவர்களின் இரு படகுகளை தங்களின் கப்பலை விட்டு மோதி கடலில் மூழ்கடித்திருப்பதும், மற்ற படகுகளை பறிமுதல் செய்திருப்பதும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான செயலாக அமைந்திருக்கிறது.

தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவும், வறுமையில் வாடும் தங்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இப்படி அரக்கத்தனமாக தாக்கிக் கைது செய்வதும், அவர்களின் படகுகளை உடைத்து நொறுக்கி நாசப்படுத்துவதும் ‘நட்பு நாடு’ என்று கூறும் இலங்கை அரசுக்கு அழகல்ல.

ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராமேஸ்வரத்தில் துவக்கி வைத்த ஈரம் காய்வதற்குள் இலங்கை கடற்படை இப்படியொரு மாபாதகத் தாக்குதலை நம் நாட்டு மீனவர்கள் மீது நடத்தி, 49 மீனவர்களைக் கைது செய்திருப்பது மிக மிக மோசமான, மனித உரிமைகளை மீறிய, அந்த மீனவக் குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் இதயமற்ற நடவடிக்கையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய அரசு துவங்கியுள்ள ஆழ்கடல் மீன்பிடிப்புத் திட்டத்திற்கும் ஊறு விளைவிக்கும் செயலாகவே இலங்கை கடற்படையின் இந்த கண்மூடித்தனமான கைதுகள் அமைந்துள்ளன.

இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்களை ஒவ்வொரு முறை விடுவிக்கும் போதும், அடுத்து வரும் சில நாட்களில் கொத்துக் கொத்தாக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் மோசமான நடவடிக்கை ஒரு தொடர்கதை போல் நீண்டு கொண்டிருக்கிறது. மீனவர் பிரச்னைக்கு சுமூகத்தீர்வு காண மீனவர்கள் பிரதிநிதிகளுடன் இருநாட்டு அரசுகளின் சார்பில், பல்வேறு மட்டங்களில், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

அந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு இந்திய அரசுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதத்தில் இந்திய மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வேதனையளிக்கிறது.

கண்மூடித்தனமாக நடந்துள்ள இந்த மீனவர் கைது நடவடிக்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்களை கொந்தளிக்க வைத்து, அவர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆகவே, 7.8.2017 அன்று கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் 64 மீனவர்களையும், 125 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, மத்திய அரசு தூதரக ரீதியிலாக உரிய அழுத்தத்தை, இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர்களின் படகுகளை முட்டி மோதி நாசப்படுத்துவது, பறிமுதல் செய்து இலங்கை சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று இந்திய அரசு, அந்நாட்டு பிரதமரிடமோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரிடமோ கண்டிப்புடன் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment