/tamil-ie/media/media_files/uploads/2017/07/MK-Stalin-1.jpg)
சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையை விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது தான் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் கைகோர்த்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு எதிரான அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம் மேற்கு மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அடுத்த எருமைப்பட்டியில் அமைந்துள்ள கட்சராயன் ஏரியை கழக தோழர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களும் இணைந்து புதர்களை அகற்றி, தூர்வாரி ஏரிக்கரைகளை எல்லாம் செம்மைப்படுத்தி புத்தம்புதிய ஏரி போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஏறத்தாழ ஏழரை ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த ஏரி இன்றைக்கு புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்து, முழுமையாக சீரமைக்கப்பட்டு விட்டது.
ஏரியில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பணிகள் நிறைவு பெற்று நாளை (27-ம் தேதி) நான் அந்த ஏரியை பார்வையிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று அதிமுக-வினர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலில், அந்த ஏரிக்குள் நுழைந்த அதிமுகவினர் அங்கு தி.மு.க.வினர் சீரமைத்திருந்த கரைகளை உடைத்து சேதப்படுத்தி, சட்ட விரோதமாக மணல் அள்ளிச் சென்றுள்ளனர். தன் சொந்தத் தொகுதியில் அதிமுகவினரை வரம்பு மீறி அராஜகச் செயல்களில் ஈடுபட ஒரு முதலமைச்சரே உத்தரவிட்டிருப்பது வெட்கக்கேடானது.
இதை மாவட்ட காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கைகட்டி வேடிக்கைப் பார்த்ததால், நேற்றைய தினம் கழகத்தொண்டர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நடைபெற்ற காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக-வினர் மணல் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தும், “குட்கா” டி.ஜி.பி.-யிடமிருந்தும் சென்ற உத்தரவினைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித காரணமும் இன்றி திடீரென செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை நிர்வாகமும் ஏரி மணலை மீண்டும் அதிமுக-வினர் அள்ளிச் செல்ல அனுமதித்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக-வினரின் இந்த அராஜகச் செயல்களை எதிர்த்து ஒன்றுபட்ட சேலம் மாவட்ட கழகத்தின் சார்பில் அனைத்து கழக முன்னனியினரும் தொண்டர்களும் தற்போது போராட்டத்திலும், மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிமுக-வினரின் அராஜகச் செயல்களை எல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு மாறாக போராடும் திமுகவினரை கைது செய்து வருகிறது. “முதலமைச்சர் தொகுதியில் எப்படி ஏரியை தூர்வாரலாம்”, என்று மாவட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களும், அதிமுகவினரும் கேட்டு பிரச்னை எழுப்புகிறார்கள்.
தன் தொகுதியில் உள்ள ஏரியை தூர்வாருவதற்கு கூட நேரமில்லாமல், ஊழல் ஊக்குவிப்பதை மட்டுமே குறியாக இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி கட்சிக்கார்களை தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட வைப்பதும், அவரே முன்னின்று சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதும், அவருக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.
தொகுதி மக்களுக்காக இவரே அந்த ஏரியை தூர்வாரியிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அரசின் குடிமராமத்து திட்டத்தில் கூட அந்த ஏரியை தூர்வார எடப்பாடி பழனிசாமிக்கு விரும்பமில்லை.
தன் தொகுதியில் உள்ள ஏரியைக் கூட தூர்வார முடியாத முதலமைச்சருக்கு இப்போது தி.மு.க. தூர்வாரியிருப்பது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தி.மு.க.வின் ஆக்கபூர்வமான தூர்வாரும் பணியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளையும், அதிமுகவினரையும் தூண்டி விட்டுள்ளார்.
இந்த இயக்கம் எப்படிப்பட்ட அடக்குமுறைகளையும் சந்தித்து வீறு கொண்டு எழுந்த இயக்கம் என்பதை ‘குதிரை பேரம்’ மூலமாக முதலமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்வது நல்லது. காவல்துறையை வைத்துக் காட்டும் இதுபோன்ற சலசலப்புகளுக்கு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகமோ, தொண்டனோ அஞ்சமாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த சில மாதங்களாக தி.மு.க.வினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே ஏரிகளை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டு, அங்கெல்லாம் நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகிறேன். அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் இருக்கும் கட்சராயன் ஏரியை நிச்சயம் நான் நாளை பார்வையிடுவேன் என்பதைத் தெரிந்து கொண்டு, அதனைத் தடுக்கவே இதுபோன்ற கலவரங்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளார்கள்.
அங்கு அராஜகச் செயல்களில் ஈடுபட்டு பிரச்னை செய்யும் அதிமுகவினரை உடனடியாக கைது செய்து சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இருக்கிறது என்பதை அறிவுறுத்த விரும்புகிறேன்.
சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையை விடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவது தான் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு. தொகுதி மக்களுக்காக பிரதான எதிர்க்கட்சி செய்துள்ள ஆக்கபூர்வமான பணியை தடுப்பது சேலம் மாவட்ட நிர்வாகத்தின் வேலையல்ல என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், சேலம் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.