பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஸ்டாலினால் ஆட்சியில் குறை காண முடியவில்லை என தருமபுரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக அரசு சார்பில் மாவட்ட வாரியாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 7-ம் தேதி தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் ஆட்சியில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிப்பு, நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
அரசுக்கு நெருக்கடி கொடுத்து கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 10 நாட்களில் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தருமபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால் 9000 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. டாக்டர் முத்துலெட்சுமி திட்டத்தின் கீழ், 87 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
5 முறை வாய்ப்பளித்தும் ஆட்சியை மக்கள் நலனுக்காக திமுக பயன்படுத்தவில்லை. பிரச்னையை எப்படி சமாளிக்க வேண்டும் என எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். மரத்தை விட்டு பூ கீழே விழுவதால் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு குறையை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
இவ்வாறு அவர் பேசினார்.