DMK MK.Stalin, dmk perasiriyar anbazhagan, dmk new general secretary, பேராசிரியர் அன்பழகன் மரணம், திமுக புதிய பொதுச்செயலாளர், மு.க.ஸ்டாலின்
திமுக பொதுச்செயலாளர் பதவிக்கான குழப்பத்தை தீர்க்க வித்தியாசமான இன்னொரு திட்டத்தையும் திமுக தலைமை பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அது, அண்ணா வழி!
Advertisment
அது என்ன அண்ணா வழி?
திமுக.வை உருவாக்கிய அண்ணா, கட்சியில் தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்தார். ‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர். அவருக்காக கட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும்’ எனக் குறிப்பிட்ட அண்ணா, திமுக.வின் பொதுச்செயலாளராகவே பதவியேற்றார். 1969-ல் அண்ணா மறைவுக்கு பிறகே நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் என்றும், கலைஞர் கருணாநிதி தலைவர் என்றும் முடிவானது.
பழைய மாதிரி, கட்சியின் தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கும் திட்டம் பற்றியும் திமுக மேல்மட்டத்தில் விவாதம் உருவாகியிருக்கிறது. 43 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் மறைவைத் தொடர்ந்தே இந்த விவாதம்!
புதிதாக பொதுச்செயலாளர் தேர்வு செய்வது என்றால், துரைமுருகனை அந்தப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும். அதில் பெரிய சிக்கல் இல்லை. ஆனால், துரைமுருகனிடம் இருக்கும் பொருளாளர் பதவியை கைப்பற்ற எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு என அரை டஜன் தலைவர்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, தலைவர் பதவியை அண்ணா வழியில் காலியாக வைத்துவிட்டு, பொதுச்செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டால் என்ன? என்கிற விவாதங்கள்தான் கட்சிக்குள் சூடாக போய்க்கொண்டிருக்கிறது. அதிமுக, தேமுதிக, மதிமுக ஆகிய இதர திராவிடக் கட்சிகளில் அதிகாரம் மிக்கப் பதவியாக பொதுச்செயலாளர் பதவி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், ‘தலைவர் ஸ்டாலின்’ என அழைத்துப் பழக்கப்படுத்தி வரும் இந்த வேளையில், அவரை பொதுச்செயலாளராக்குவது சரி வருமா? அது, ‘டீ புரமோஷன்’ போல ஆகிவிடாதா? முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட இருக்கும் அவருக்கு இது பின்னடைவு ஆகுமா? என்றெல்லாம் தீவிரமாக யோசிக்கிறார்கள்.
திமுக தலைமைக்கழக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘ஸ்டாலின் தலைவராக தொடர்வதையே கட்சி விரும்புகிறது. புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு அதிகம். எனினும் ஆப்ஷன் பி-யாக தலைவர் பதவியை காலியாக வைத்திருப்பது பற்றி கட்சி மட்டத்தில் விவாதம் இருக்கிறது’ என்றார்.
அண்ணா வழியா? கலைஞர் வழியா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"