கைது செய்யப்பட்ட ஸ்டாலின்; ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என முழக்கம்!

எம்.எல்.ஏ. சரவணனின் பேர வீடியோ விவகாரம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதனை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்ததால், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, “சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சபாநாயகர் எச்சரித்தும், ‘எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு’ என்ற பதாகைகளை ஏந்தி, திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

இதனால், ஸ்டாலின் உட்பட திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் குண்டுக்கட்டாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனையடுத்து, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எம்.எல்.ஏ. சரவணனின் பேர வீடியோ ஆதாரத்தை மையமாக வைத்துதான் தான் நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால், அதனை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். சபாநாயகர் உத்தரவுப்படி நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம். சினிமா படங்களில் வருவது போல், “மாப்பிள்ளை இவரு தான்… ஆனா, அவரு போட்டுருக்குற சட்டை என்னுது இல்ல” என்பது போல் உள்ளது எம்.எல்.ஏ. சரவணனின் விளக்கம். இப்படி குதிரை பேரம் நடத்தப்பட்டு தான் வாக்கெடுப்பில் இந்த அரசு வெற்றிப் பெற்றுள்ளது. இதனால், இந்த ஆட்சி உடனடியாக கவிழ்க்கப்பட வேண்டும். கலைக்கப்பட வேண்டும். இது குறித்து அரசே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் ஸ்டாலின், துரைமுருகன் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மயிலாப்பூரில் உள்ள சமூக நலக் கூடத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுளள்து.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close