scorecardresearch

தமிழக மக்களின் நன்மைக்காக அந்த முடிவை திமுக நிச்சயமாக எடுக்கும்: மு.க ஸ்டாலின் சஸ்பென்ஸ்

மக்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வருவோமே தவிர,பின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mk stalin - Dmk

மக்களின் ஆதரவோடு தான் ஆட்சிக்கு வருவோமே தவிர,பின்வாசல் வழியாக திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது என, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் வடக்கு எம்.எல்.ஏ நடைபெற்ற திருமண ராஜேந்திரேன் இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மு.க ஸ்டாலின் உரையாற்றியபோது: திராவிட இயக்கத்தை, ஒழிக்க சமயம் பார்த்து நேரம் பார்த்து சிலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன், திராவிட இயக்கத்தை பொறுத்தவரையிலே அவன் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, இந்த நாட்டை ஆளக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, எந்த கொம்பனாக இருந்தாலும் சரி, இந்த இயக்கத்தை தொட்டு கூட பார்க்க முடியாது.

கொல்லைப் புறமாக திமுக என்றுமே ஆட்சிக்கு வர நினைக்காது. மக்களை சந்தித்து, மக்கள் இடத்திலேயே உரிமையோடு ஆதரவு பெற்று அந்த அடிப்படையில் தான் ஆட்சிக்கு வருமே தவிர கொல்லைப் புறமாக என்றைக்கும் ஆட்சிக்கு வருவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டிருக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 117-ஆக மாற வேண்டும் என்பது விருப்பம் அல்ல, 200-ஆக மாற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

அதிமுக-வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்கள் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, எனவே சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி நம்பிக்கை கோரக் கூடிய வாக்குகளை பெறக்கூடிய ஒரு நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரி இருக்கின்றனர்.

ஒரே நிலைலேயே தனித் தனியாக அதிமுக-வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ-க்களும் கையெப்பம் இட்டு தனித்தனியாக கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஆகவே அந்த செய்தி வந்த உடனேயே திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையிலேயே ஜனநாயகத்தின் அடிப்படையிலே நானும் ஒரு கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தேன்.

இப்படி ஒரு நிலை தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுங்கட்சியில் இருக்க கூடியவர்களே கடிதம் எழுதி தந்திருக்கிறார்கள் என்று சொன்னால் இந்த நிலைக்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன்.

அதை தொடர்ந்து கடிதம் மட்டும் தந்தால் போதாது என்று திமுக மற்றும் தோழமை கட்சியுடன் இணைந்து ஆளுநரை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தோம். இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை எதிர்க்கட்சிளும் ஒன்று சேர்ந்து நேற்றைக்கு ஆளுநரை சந்தித்து அந்த பிரச்சனையை தெரிவித்துள்ளனர்.

ஆளுநரை சந்தித்துவிட்டு பின்னர் அவர்கள் கூறும்போது, ஆளுநரை சந்தித்தோம், ஆளுநர் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. இது கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கிற பிரச்சினை. ஆகவே இதில் நாங்கள் தலையிட முடியாது. இது கட்சி பிரச்சினை என்று சொன்னதாக நேற்று ஆளுநர் சந்தித்து விட்டு வந்து இருக்கிற அந்த தலைவர்கள் வெளியில் வந்து பேட்டி அளித்தனர்.

நான் கேட்க விரும்புவது. இதே நிலை ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக 10 பேரை தனியாக பிரித்து ஆளுநர் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தார். இந்த ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று கடிதம் கொடுத்து இருக்கிறார். அப்போது 10 பேர் தான், அதை ஏற்றுக்கொண்டு ஆளுநர் உத்தரவிடவில்லையா?

ஆனால் இப்போது 19 பேர் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது, 25, 26, 27 எம்.எல்.ஏ.க்கள் என தாண்டிவிட்டது. போகிற போக்கில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

89 பேர் கொண்டிருக்கின்ற கூடிய திராவிட முன்னேன்ற கழகத்தினுடைய ‘பந்து’ வந்தால் ஆளுநர் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள். அந்த பந்தை நாங்கள் கொண்டு போகிறோமா? கொண்டு போகவில்லையா? என்பது ஒரு கேள்விக்குறி. இப்பவே சொல்லி விட்டால் சஸ்பென்ஸ் இல்லாமல் போய்விடும்.

அதனால் தான் நேற்றைக்கு சொன்னேன் ஆராய்ந்து, சிந்தித்து, சட்ட ரீதியாக இதை பற்றி எல்லாம் விவாதித்து அதற்கு பிறகு திமுக ஒரு முடிவு எடுக்கும். ஆனால் அந்த முடிவு எங்களுடைய சுய நலத்திற்காக அல்ல, திமுக-வின் சுய நலத்திற்காக அல்ல. தமிழ்நாடு மக்களுடைய நன்மைக்காக அந்த முடிவை நிச்சயமாக எடுக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

இவ்வளவு நாள் பொறுத்து இருந்தீர்கள். இன்னும் கொஞ்சம் நாள் தான். நான் கொஞ்சம் வருஷம், கொஞ்சம் மாசம் சொல்லல.கொஞ்ச நாள் தான் சொல்கிறேன். ஆகவே விரைவிலேயே தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் ஏற்படுத்தி தருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தயாராக இருக்கக் கூடிய அந்த சூழ்நிலையை நிச்சயமாக திமுக உருவாக்கி தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin in salem said that dmk will come to power only by support of people never be by back door