ஸ்டாலின் அழைப்பு: திமுக-வுடன் கூட்டணி குறித்து தனியரசு விளக்கம்

அதிமுக கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக-வுடனான கூட்டணி அமைப்பது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு விளக்கம் அளித்துள்ளார்.

முரசொலி நாளிதழின் பவள விழா நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் இல்லத்தில் அவரை நேற்று நேரில் சந்தித்த ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, முரோசொலி பவள விழாவில் பங்கேற்க வருமாறு, அதிமுக தோழமை கட்சி எம்.எல்.ஏ.-க்களான கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோருக்கு இன்று அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு சட்டப்பேரவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக ஸ்டாலினை இவர்கள் மூவரும் சந்தித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இந்த மூவரணி திமுக பக்கம் சாய்ந்துவிடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக-வுடனான கூட்டணி குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முரசொலி பவள விழாவில் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். விழாவுக்குச் செல்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடனும் தோழமைக் கட்சித் தலைவர்களிடமும் பேசி முடிவு செய்வோம்.

அனைத்துக் கட்சிகளுடனும் இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறோம். தேர்தல் நேரத்து சூழல்கள் தான் கூட்டணியை தீர்மானிக்கும். கோரிக்கைகளை முன்வைத்து திமுக-வுடன் இணைந்து போராடுவது என்பது தேர்தலை மையமாக வைத்து அல்ல. நாங்கள் திமுக பக்கம் செல்லப்போகிறோம் என்பது தவறான தகவல். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுடன் கலந்து பேசுவதால் திமுக பக்கம் சென்றுவிடுவோம் என்பது போன்ற தோற்றத்தை அது காட்டுகிறது என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close