விவசாயிகளுக்காக ஆக.,16-ல் ஆர்ப்பாட்டம்: திமுக பங்கேற்பதாக ஸ்டாலின் அறிவிப்பு

விவசாயிகள் உரிமைகளுக்காக நடத்தப்படும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகள் உரிமைகளுக்காக வருகிற 16-ம் தேதி நடத்தப்படும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: வரலாறு காணாத வறட்சியாலும், வங்கிக் கடன் தொல்லையாலும் இன்றைக்கு தமிழக விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது என்றால், “அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள்” என்று சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்தும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியிருக்கும் ‘குதிரை பேர’ அதிமுக அரசின் விவசாயிகள் விரோத செயலைப் பார்த்து ஏழரைக் கோடி இதயங்கள் எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் (பா.ஜ.க., அதிமுக தவிர), மற்றும் விவசாய சங்கங்கள் விவசாயிகளின் இன்னல்களைப் போக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், பலமுனை போராட்டங்களை நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் காது கொடுத்து கேட்கவும் இல்லை. அவர்களின் கவலையைப் போக்கும் விதத்தில் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக போராடும் விவசாயிகளை சந்திக்க மறுப்பது, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பது, விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது, கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவளித்து போராடிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுவது, கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர். திரு. ஜெயராமன் உள்ளிட்ட பத்து பேரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைத்தது போன்ற அடக்குமுறைகளை விவசாயிகள் மீது மட்டுமல்ல – அவர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீதும் கட்டவிழ்த்துவிட்டு, ஒரு சர்வாதிகார மனப்பான்மையில் மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு இயங்கி வருகிறது. இந்த விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசும், மாநிலத்தில் உள்ள பா.ஜ.க.,வும் துணை நிற்பது வேதனையளிக்கிறது.

இந்நிலையில் ‘இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில் விவசாயிகளின் முழுக் கடன்களையும் தள்ளுபடி செய்வது, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவது, கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள முழு தொகையையும் வழங்குவது, காவேரி டெல்டா பகுதியை சிறப்பு வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 16ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவதற்காக நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் மாவட்ட தலைநகரங்களில் தவறாமல் பங்கேற்று, ஒட்டுமொத்த தமிழகமும் விவசாயிகளின் பக்கம் உறுதியாக நிற்கிறது என்ற உணர்வினை மத்திய – மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்துமாறு அனைத்து கழக மாவட்ட செயலாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

19-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் உடன் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து ‘இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் நடத்தப்படும் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கும், மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசுக்கும் “விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தேவை” என்ற தீர்க்கமான செய்தியை கொண்டு போய் சேர்த்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close