இரும்புக் கரமான நீட்டை எதிர்த்து இணையும் கரங்கள்: ஸ்டாலின் அழைப்பு

ஆட்சியாளரின் எவ்வித அடக்குமுறையும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்காமல் எங்கள் கரங்கள் பாதுகாக்கும் என்று சொல்லும் அளவில் நமது கைகள் இணையட்டும்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் திமுக சார்பில் நடத்தப்படவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள போராட்ட அழைப்பு மடலில் கூறியதாவது: பொதுவாழ்வு என்பது பொழுதுபோக்கல்ல, போராட்டக்களம் என்பதை நம்மை வழிநடத்தும் தலைவர் கலைஞர் தொடர்ந்து நினைவூட்டியிருக்கிறார். பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே போர்க்களங்களைப் போல போராட்டக் களங்களை சந்தித்த வீரவரலாறு தி.மு.கழகத்தினருக்கு உண்டு. தமிழ் மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும், இந்த மண்ணில் சமூகநீதி நிலை பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய போராட்டக் களங்களை எதிர்கொள்கிறோம்.

எளிய குடும்பங்களிலிருந்தும் டாக்டர்கள், இன்ஜினியர்கள் என தொழிற்கல்வி பயின்று உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய வகையில் இருந்த தமிழகத்தில், நீட் தேர்வு எனும் கொடுமையான முறையினால், எளிய மக்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி கானல் நீராகியுள்ளது. சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்த நிலையில், தமிழகத்தை ஆளும் குதிரை பேர பினாமி அ.தி.மு.க. அரசு அதனைத் தடுப்பதற்கு முழு முனைப்புடன் சட்டம் இயற்றவில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுத்த தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவில்லை. அ.தி.மு.க., அரசின் அலட்சியத்தாலும், மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசின் சமூகநீதிக்கு எதிரானக் கொள்கைகளாலும் நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்து மாணவர்களின் மருத்துவப் படிப்புக்குத் தடை போட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின்கீழ் படிப்பவர்களே அதிகளவில் இருக்கிறார்கள். அவர்கள் இத்தனைகாலமாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறையில் சிறந்த டாக்டர்களாகப் பணியாற்றுகிறார்கள். பிற மாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் உள்ள டாக்டர்கள் திறமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், மாநில அரசின் பாடத்திட்டத்தைப் புறக்கணிக்கும் நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடக்கூடாது.

நீட் தேர்வு வராது எனப் பொய்யான வாக்குறுதிகளை மாணவர்களுக்கு அளித்து ஏமாற்றினார்கள். நீட் தேர்வு வந்தது. அந்தத் தேர்வின் முடிவுகளும் வெளியாயின. தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதை கழகமும் மற்ற இயக்கங்களும் சுட்டிக்காட்டியதும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இடஒதுக்கீடு என்கிற அரசாணையை வெளியிட்டு பொய்யான நம்பிக்கையை அளித்தது அரசு. அந்த நம்பிக்கையையும் நீதிமன்ற உத்தரவு தகர்த்துவிட்டது. தமிழக மாணவர்கள் தத்தளிக்கிறார்கள்.

குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி எதிர்காலத்தை இழந்த நிலையில், குதிரை பேர ஆட்சியின் அமைச்சர்கள் தங்கள் டெல்லி எஜமானர்களிடம் சென்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஒப்புக்கு மனு கொடுத்திருக்கிறார்கள். இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தவும், மத்திய அரசின் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 27-ம் தேதி தி.மு.கழகமும் தோழமைக் கட்சியினரும் இணைந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கழகமும் தோழமைக் கட்சியினரும் இணைந்து நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்தின் விளைவாக மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வகையில், நம்முடைய பங்களிப்பு முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும்.

தி.மு.கழகத்தின் அனைத்து அணிகளும் இந்த மனித சங்கிலியில் இணைய வேண்டும். குறிப்பாக மாணவரணியினர் அதிகளவில் பங்கேற்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்யவேண்டும். தோழமைக் கட்சியினரை வரவேற்று அவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். மத்திய-மாநில ஆட்சியாளரின் எவ்வித அடக்குமுறையும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்காமல் எங்கள் கரங்கள் பாதுகாக்கும் என்று சொல்லும் அளவில் நமது கைகள் இணையட்டும். நீட் எனும் கொடுந்தடை தகரட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

×Close
×Close