மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கோரும் ஸ்டாலின்; ஆளுநருடன் நேரில் சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்திருக்கிறார். அவரை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது சந்தித்து பேசியுள்ளார். அப்போது, எம்.எல்.ஏ. பேரம் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து ஆளுநரிடம் அவர் முறையிட்டுள்ளார். இதையடுத்து, அந்த குறிப்பிட்ட வீடியோ ஆதாரத்தையும் ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்த ஸ்டாலின், இந்த புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி இருக்கிறார்.

மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், அபுபக்கர், கே.ஆர்.ராமசாமி ஆகியோருடன் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “குதிரை பேரம் நடத்திதான் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிப் பெற்றுள்ளது. எனவே, இப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி தந்திருக்கிறார். ஒருவேளை அவர் அதுபோன்று நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எங்களது அடுத்தக் கட்ட முடிவு குறித்து ஆலோசித்து அறிவிப்போம்” என்றார்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவையில், கூவத்தூரில் பணபேரம் நடத்தப்பட்டது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரினார்.

ஆனால், இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் சட்டமன்றத்தில் அது குறித்து விவாதிக்க அனுமதிக்க முடியாது என்றார். இது தொடர்பான விவாதங்களால் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர், கூவத்தூரில் நடந்த பணபேர விவகாரம் தொடர்பான ஆதாரத்தை கொண்டு வந்து, அதனை சபாநாயகரிடம் கொடுத்தார் ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று சென்னை வந்த ஆளுநரிடம் அதே ஆதாரத்தைக் வழங்கி நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close