தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க. தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். இந்த 33 அமைச்சர்கள் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் சாதக பாதகங்கள் என்ன என்று அலசுவோம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் பெரும்பாண்மையாக் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் 133 எம்.எல்.ஏ.க்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆளுநர் மாளிகையில் இன்று (மே 7) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 33 பேர் அமைச்சர்களாக பொறுப்பெற்றுக்கொண்டனர்.
எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும், துரைமுருகன் நீர்பாசனத்துறை அமைச்சராகவும், பழனிவேல் தியாகராஜன் ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பெற்றுக்கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக சமூக ரீதியாகவும் மாவட்டங்கள் மற்றும் மண்டல ரீதியாகவும் அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இந்த அமைச்சரவை வழக்கம் போல ஒரு திமுகவின் அமைச்சரவையாக அமைந்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்டாலின் அமைச்சரவை மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் அளிக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
1.அமைச்சர் எ.வ.வேலு - பொதுப்பணித் துறை - திருவண்ணாமலை மாவட்டம்
2.அமைச்சர் துரைமுருகன் - நீர்வளத் துறை - வேலூர் மாவட்டம்
3.அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி - கூட்டுறவுத் துறை - திண்டுக்கல் மாவட்டம்
4.அமைச்சர் பொன்முடி - உயர்கல்வித் துறை - கள்ளக்குறிச்சி
5.அமைச்சர் கே.என்.நேரு - நகர்புற வளர்ச்சித் துறை - திருச்சி மாவட்டம்
6.அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - வேளாண்மை - உழவர் நலத்துறை - கடலூர் மாவட்டம்
7.அமைச்சர் கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை - தூத்துக்குடி மாவட்டம்
8.அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்புத்துறை - தூத்துக்குடி
9.அமைச்சர் ராஜகண்ணப்பன் - போக்குவரத்து துறை - ராமநாதபுரம்
10.அமைச்சர் கா.ராமச்சந்திரன் - வனத்துறை - நீலகிரி
11.அமைச்சர் அ.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை - திண்டுக்கல் மாவட்டம்
12.அமைச்சர் செந்தில் பாலாஜி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை - கரூர் மாவட்டம்
13.அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை - விருதுநகர்
14.அமைச்சர் தங்கம் தென்னரசு - தொழில்துறை - ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை தொல்பொருள் - விருதுநகர் மாவட்டம்
15.அமைச்சர் எஸ்.ரகுபதி - சட்டத்துறை - புதுக்கோட்டை மாவட்டம்
16.அமைச்சர் சு.முத்துசாமி - வீட்டுவசதித் துறை - ஈரோடு மாவட்டம்
17.அமைச்சர் பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித் துறை - சிவகங்கை மாவட்டம்
18.அமைச்சர் தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில்துறை - சென்னை காஞ்சிபுரம் மாவட்டம்
19.அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - செய்தித் துறை - திருப்பூர் மாவட்டம்
20.அமைச்சர் ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை - ராணிப்பேட்டை மாவட்டம்
21.அமைச்சர் மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை - சென்னை
22.அமைச்சர் மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை - சென்னை திருவள்ளூர் மாவட்டம்
23.அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் துறை - அரியலூர் மாவட்டம்
24.அமைச்சர் பி.கே.சேகர் பாபு - இந்து சமயம் மற்று அறநிலைய துறை - சென்னை மாவட்டம்
25.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை - மதுரை
26.அமைச்சர் சா.மு.நாசர் - பால்வளத்துறை - திருவள்ளூர்
27.அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை - விழுப்புரம் மாவட்டம்
28.அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித் துறை - திருச்சி மாவட்டம்
29.அமைச்சர் சிவ.வீமெய்யநாதன் - சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - புதுக்கோட்டை மாவட்டம்
30.அமைச்சர் சிவி.கணேசன் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - கடலூர் மாவட்டம்
31.அமைச்சர் மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை - கன்னியாகுமரி மாவட்டம்
32.அமைச்சர் மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை - நாமக்கல் மாவட்டம்
33.அமைச்சர் கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிட நலத்துறை - திருப்பூர் மாவட்டம்
இந்த பட்டியலின்படி அதிகபட்சமாக
தென்மாவட்டங்களைச் சேர்ந்த 11 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் திருச்சி மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் கடலூர் மாவட்டத்தில் 2 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தலா 1 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல, திருவண்னாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா 1 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 5 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை.
அதிமுகவுக்கு அமோகமாக வாக்களித்த கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திமுக வை அமோகமாக ஜெயிக்க வைத்த டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லை என அங்குள்ள திமுகவினர் புலம்புகிறார்கள். முதலமைச்சரே டெல்டா மாவட்டத்துக்காரர் என்றும் சிலர் சமாதானம் சொல்கிறார்கள். இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் பதவி ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், “காவிரிக்கரையாம் திருவாரூரைச் சேர்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அமைச்சர்கள் என்ற குறைக்கு பதிலாக முதல்வரே டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்டாலின் மூலம் மறைமுகமாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் எண்ணிக்கையில் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கலாம். அதனால், தமிழகத்தில் 33 அமைச்சர்களை நியமிக்கலாம்.
அமைச்சரவையில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவத்தில் உள்ள சாதகங்கள்:
1.அமைச்சரவையில் மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் அளிப்பதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் நலத் திட்டங்கள் எளிதில் சென்று சேர்வதற்கு அந்த அமைச்சர்களால் விரைவாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
2.அமைச்சரவையில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவம் ஆளும் கட்சியினரை திருப்திபடுத்த உதவும்.
3.மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கு மூலம் கொண்டுவருவது எளிதாக அமையும்.
4.அந்த மாவட்டத்தில் கட்சிப் பணிகளும் அரசு திட்டங்களும் அமைச்சரை மையமாக வைத்து விரைவாக செயல்படுத்தப்படும்.
5.அமைச்சரவையில் மாவட்ட வாரியாக பிரதிநிதித்துவம் கிடைக்காதபோது அந்த மாவட்டத்தின் தேவைகள் பெரிய அளவில் கவனம் பெறாமல் போகிறது.
அமைச்சரவையில் மாவட்ட வாரியான பிரதிநிதித்துவத்தில் உள்ள பாதகங்கள்
- 33 அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட முடியும் என்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு அமைச்சர் என்று நியமனம் செய்ய முடியாது.
2.அமைச்சர்கள் இடம் பெறாத மாவட்டங்களின் கோரிக்கைகள் தேவைகள் கவனம் பெறாமல் போக வாய்ப்பு உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.