Advertisment

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் எந்த பலனும் கிடைக்காது : மு.க.ஸ்டாலின்

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் ஜெ. மரண மர்மத்தில் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin urges CBI inquiry for jeyalalitha death, mk stalin neglects justice arumugasamy inquiry commission, aiadmk, jeyalalitha, judicial inquiry

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் எந்த பலனும் இருக்கப் போவதில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Advertisment

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்த பிறகு, நாற்பது நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு அவசர அவசரமாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்துள்ளார்கள். முன்னாள் முதல்வரின் மரணத்தை பதவியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தேன்.

ஆனால் அப்போதெல்லாம் “இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்க இயலாது” என்று அதிமுக அமைச்சர்களும், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் தட்டிக் கழித்து வந்தார்கள். ஏன் “தர்மயுத்தம்” அறிவித்த திரு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போதே “உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். ஆனால் அவர் பதவி விலகும் வரை அதற்கு ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை.

இது தொடர்பான வழக்கு ஒன்று, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்ற நிலையில் இப்போது திடீரென்று ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்துள்ளார்கள். கடந்த வருடம் செப்டம்பர் 22-ம் தேதி, முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து அதிமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அப்பல்லோவில் முகாமிட்டு இருந்தது. தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் எல்லாம் சிகிச்சையில் முழு பங்கு வகித்துள்ளார்கள்.

நிதியமைச்சராக இருந்து பிறகு ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போதே முதலமைச்சர் இலாக்காக்களை பெற்றுக் கொண்ட ஓ. பன்னீர்செல்வம் அப்பல்லோவில் இருந்திருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அப்பல்லோவில் துணைக்கு இருந்தார். அத்தனை பேருமே வெளியில் வந்து விதவிதமான பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். “ஜெயலலிதா எழுந்து நடக்கிறார்”, “உடற்பயிற்சி செய்கிறார்” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

இப்போது மூத்த அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசனே, “நாங்கள் எல்லாம் அம்மா உடல்நிலை பற்றி பொய் சொன்னோம்” என்று கூறி, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் எழுந்த போது லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேயே சென்னைக்கு வந்து, “முறையாக சிகிச்சை அளித்தோம்” என்று பேட்டியளித்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயலலிதா அம்மையார் அருகில் இருந்தவர்களுக்கு துணை போன முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் எவ்வித பலனும் இருக்கப் போவதில்லை.

அப்பல்லோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த போது நிகழ்ந்த மர்மங்களில் அதிமுகவில் இருந்த சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது இந்த மர்மம் குறித்து விசாரிக்க மறுத்தார். பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியும் 40 நாட்களுக்கு மேல் நீதிபதியைக் கூட நியமிக்காமல் தடுத்துக் கொண்டிருந்தார்.

அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இன்றுவரை மாறி மாறி பேட்டியளித்து ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது தவிர யாருமே பார்க்க முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதா புதுவை நெல்லித்தோப்பு உள்ளிட்ட நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் கையெழுத்துப் போட்ட சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் இலாகாவை ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய விவகாரமும் புதிதாக எழுந்துள்ளது.

ஜெயலலிதா மறைந்தவுடன் நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஐந்து முறை வந்து சிகிச்சை அளித்துள்ளார்கள். வெளிநாட்டு மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்துள்ளார்கள். ஆகவே இவ்வளவு பரந்த விசாரணையில் மத்திய அமைச்சர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

இது போன்று மாநிலம் சார்ந்து மட்டுமின்றி, மாநிலத்திற்கு வெளியிலும்- குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மட்டுமே இந்த விசாரணைக்கு உகந்த அமைப்பாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே முழு விசாரணை நடைபெற்று தமிழக மக்களுக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் அடங்கியுள்ள மர்மங்கள் குறித்த உண்மைகள் வெளி வரவேண்டும் என்றால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

Mk Stalin Justice Arumugasamy Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment