எம்எல்ஏ-க்கள் பேர விவகாரம்: ஸ்டாலின் மனு தள்ளுபடி

கூவத்தூர் விடுதியில் எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டதாக வெளிவந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை கோரிய திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சித் தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிளவு கண்டது. அதனையடுத்து, சசிகலா ஆதரவு எம்எல்ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போதே, அவர்களுக்கு குதிரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ஓபிஎஸ் அணிக்கு செல்லாமல் தடுக்க எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாகவும், தங்கம் கொடுக்க ஆலோசித்ததாகவும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் வீடியோ காட்சிகளை டைம்ஸ் நவ் மற்றும் மூன் தொலைக்காட்சி ஆகியவை வெளியிட்டன.

இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏ-க்கள் பேரம் பேசப்பட்டது மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்த இந்த விவாகரம் தொடர்பாக சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், “இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் நேரடியாக சிபிஐ-யை அணுகலாம். கடத்தல் தங்கமாக இருந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என்ற வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்று” மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.

×Close
×Close