scorecardresearch

இரண்டு, மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும்: மு.க ஸ்டாலின்

ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை என்றால் மக்கள் மன்றத்தை நாடுவோம்

இரண்டு, மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும்: மு.க ஸ்டாலின்

ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை என்றால் மக்கள் மன்றத்தை நாங்கள் நாடுவோம் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாள், திமுக ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு, முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல, பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர் விருது பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து மு.க ஸ்டாலின் கௌரவப்படுத்தினார். இந்த விழாவின் போது மு.க ஸ்டாலின் பேசிய போது: திமுகவில் 15-வது பொதுச்தேர்தல் நடத்தப்பட திட்டமிட்டுள்ளதையடுத்து, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தற்போது முதல் நவம்பவர் 15-ம் தேதி நடத்தவுள்ளோம்.

மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்குவது திமுக தான். நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் தீவிரமாக போராடுகிறார்கள். தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று மானத்தை அடகு வைத்து போராட்ட்த்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்களை பற்றி இந்த அரசு கவலைபடவோ கண்டுகொண்டதாகவோ தெரியவில்லை.

திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. நாட்டில் தம்மை தாமே தலைவர் என கூறிக்கொள்ளும், அனாதை தலைவர் திமுக ஆட்சிக்கு வர துடிப்பதாக தெரிவிக்கின்றனர். கட்சிக்கு தலைவராக வரமுடியாமல், செயல் தலைவராக இருந்து வருகிறார் என்று கூறிவருகிறார்கள்.

எந்த பொறுப்பில் இருந்தாலும், மக்களின் ஒருவனாக இருந்து தொண்டாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இந்த கேள்வியை கேட்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு வந்து கேட்கட்டும். நான் பதில் சொல்கிறேன். அவர் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு கேள்வி கேட்டால், மேடையில் அல்ல தெருமுனையில் வந்து பதிலளிக்கிறேன். இதற்கு எடப்பாடி பழனிசாமி தயாரா?

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இதேபோல, நீட் தேர்வில் நம்ப வைத்து கழுத்தை அறுத்தனர். இதனால், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதற்கெல்லாம் யார் காரணம், மத்திய, மாநில அரசுகள் தானே. இதன்காரணமாக தான் இதனை தற்கொலை அல்ல கொலை என பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றோம்.

இந்த முப்பெரும் விழாவில், சமூக நீதியை காப்பாப்பது, மாநில உரிமைகளை பாதுகாப்பது, ஆகியவற்றை நாம் ஒரு உறுதி மொழியாக எடுக்க வேண்டும். இவை தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே, ஆளும் கட்சியில் இருக்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை திரும்ப பெறுகிறோம் என ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் வலியுறுத்தி வரும் நிலையில், திமுக இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டியிருந்தபோது, அதில் 109 பேர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். அதே நாளில் டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர்க தங்களிடம் 21 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மீண்டும் தி.முக., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து விவரித்தோம். நாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளும் ஆளுநர், அதற்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஆளுநருக்கு வேறு எங்கோ உத்தரவு வருவது தெரிகிறது.

இந்த விவகாரத்தில், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடியும் பலனில்லை என்றால் மக்கள் மன்றத்தை நாங்கள் நாடுவோம். இவையெல்லாம், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, நாட்டை காப்பாற்றுவதற்காக. இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீதிமன்த்தின் மூலமாக நல்ல செய்தி வரும் என நம்புகிறோம். ஒருவேளை நியாயம் கிடைக்க வில்லை என்றால், மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மு.க ஸ்டாலின் பேசினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin said that if they dont get justice they will meet people