எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உட்கட்சி விவகாரங்களையும், எதிர்கட்சிகளை விமர்சிப்பதே தற்போதைய ஆட்சியாளர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் பேசினார். அப்போது அவர் கூறும்போது: இந்த ஆட்சியானது பதவி அதிகாரத்தை தக்க வைத்துக கொள்ள கமிஷன் வாங்கிக் கொண்டு நடத்தப்படுகிற ஆட்சியாகும். மக்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து கவலை இல்லாத இந்த ஆட்சி, எதற்கும் லாயக்கற்றது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரி பணத்தை நியாமாக செலவு செய்கிறார்களா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர் புகழ் குறித்து பேசியிருந்தால் விமர்சித்திருக்க மாட்டோம். ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் உட்கட்சி விவகாரங்களையும், எதிர்கட்சிகளை விமர்சிப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
அரசு விழாக்களுக்கு மாணவ-மாணவிகளை அழைத்து வரக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், நேற்றைய நிகழ்சியில் மாணவர்கள் பள்ளி வாகனங்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இருந்த ஆளுநரை போல அல்லாமல், தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள ஆளுநர் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசியல் சூழ்நிலையை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடற்கரையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்தது தான். சிவாஜி மணி மண்டபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை அகற்றியுள்ளனர். முன்னதாக கருணாநிதியினின் பெயர் ஜெயலலிதாவிற்கு உறுத்துவதாக இருந்தது. தற்போது எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியாளர்களுக்கு உறுத்துகிறது. ஜெயலலிதாவின் பெயரை இடம்பெற செய்ய வேண்டும் என்பதற்காகவே சிவாஜி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டது.
கருணாநிதி தலைமையில் 2006-11 வரை திமுக அரசு, காங்கிரஸ் மற்றும் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்து தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது. ஆனால்,ய தற்போது அதிமுக எம்.எல்.ஏ-க்களே ஆளும் அரசு மீது அதிருப்தியடைந்து ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். எனவே,அவர்கள் தான் மைனாரிட்டி அரசு. திமுக-வை பார்த்து மைனாரிட்டி ஆட்சி என்பது கூறுவதா? இந்த ஆட்சி திரிசங்கு ஆட்சி. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்று கூறினார்.