ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்றது. திருவாரூரில் ரூ.12 கோடியில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் மிக பிரம்மாண்டமாக ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ளது கலைஞர் கோட்டம்.
இதனை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார்.
இந்தத் திறப்பு விழாவில் சிறப்புரையாற்றிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “திராவிட கட்டட கலையுடன் நவீன வசதிகளோடு கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக்கிய ஊர் திருவாரூர்.
அண்ணாவை, கருணாநிதி முதன் முறையாக சந்தித்தது திருவாரூரில்தான். என் தந்தைக்கு, என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாக கலைஞர் கோட்டத்தை கருதுகிறேன்.
கலைஞர் கோட்டம் என்பது அவரது பரிணாமங்களை சொல்லும் கருவூலம். இன்றைக்கும் கருணாநிதி தலைமையிலான ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
"மன்னர்கள் கூட தாங்கள் ஆளும் போது தான் கோட்டமும், கோட்டையும் கட்டுவார்கள். ஆனால் கலைஞரின் மறைவுக்குப் பிறகு இங்கு கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. இன்னமும் கலைஞர் வாழ்கிறார், ஆள்கிறார் என்பதன் அடையாளமாகத் தான் இந்த கோட்டம் இங்கு அமைந்திருக்கிறது.
'தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேர்வது போல் திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயணித்துக் கொண்டிருப்பவர் கலைஞர்.
அவரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர். பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு. பாஜகவை மீண்டும் ஆள அனுமதித்தால் தமிழ்நாடே காணாமல் போகும். பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுதீயை அணைக்க வேண்டும்.
பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்திய நாட்டிற்கும் கேடாக முடியும். வெற்றி வேண்டும், வெற்றிக்கு முன்னாள் ஒற்றுமை வேண்டும், அதன் முன்னோட்டமாகவே பாட்னாவில் ஜனநாயக மாநாடு நடக்க உள்ளது.
ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக பாட்னாவில் நடக்கும் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்க போகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே" என மு.க.ஸ்டாலின் பேசினார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.