மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தமிழக மக்களைக் குலை நடுங்க வைத்துள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, டெங்கு பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது”, என்ற உண்மைத் தகவலை டெல்லியில் பேட்டியளித்த தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். “தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டிய தில்லை”, என்று சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய்யென இப்போது சுகாதாரத்துறை செயலாளரின் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு நீடிக்காது’ என்பார்கள்.‘குதிரை பேர’ அதிமுக அரசில் ‘குவாரி முதல் குட்கா’ வரை ஊழல் குற்றச்சாட்டுக்குஉள்ளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் அளித்த பதிலின் புளுகும், சாயமும் வெளுத்துப் போய் விட்டது.
தமிழகத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றும், 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரிக்கை மணி அடித்தாலும், ஊழல் மயக்கத்தில் இருந்த அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் காதில் விழவில்லை. அந்த அமைச்சரைக்காப்பாற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கவலைப்படவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி விநியோகித்தற்கான பட்டியலை வருமான வரித்துறை கைப்பற்றிய அன்றே அமைச்சர் விஜய பாஸ்கர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அடுத்து மத்திய அரசுக்கு ரூ.250 கோடி வரி ஏய்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை தாராளமாக விற்பனை செய்ய அனுமதிக்க ரூ.40 கோடி லஞ்சம் பெற்றார் என்று புகார் வந்த போதாவது அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி விலக முதலமைச்சர் கூறியிருக்க வேண்டும்.
மாநில அரசுக்கே ரூ.245 கோடி இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு கற்களை வெட்டி எடுத்த குவாரி ஊழலை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்த அன்றே அமைச்சர் விஜயபாஸ்கரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்.
மத்திய - மாநில அரசுகளுக்கு ஏறக்குறைய ரூ.495கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தி விட்டதாக வருமான வரித்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜய பாஸ்கரை டெல்லிக்கு அனுப்புகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இவ்வளவு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை பார்க்கிறார். பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்கிறார். ஊழல் அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர்களுடனும், பிரதமருடனும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் அனுமதிக்கிறார்.
ஆனால் “நீட் தேர்வுக்கு” மத்திய அரசு இதுவரை அனுமதியும் அளிக்கவில்லை. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுத் தரவில்லை. இதனால் மாணவர்கள் மருத்துவக் கல்வி கனவு சீரழிந்து இன்றைக்கு எதிர்காலம் சூன்யமாகிவிட்ட வேதனையில் தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
ஆகவே ‘நீட்’ தேர்வுக்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தாரா அல்லது தனது மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள டெல்லிக்கு காவடி எடுத்தாரா என்ற கேள்வி எழுகிறது.
ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதாரத்துறையை முழுநேரப் பணியாக கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு ‘பார்ட் டைம் மினிஸ்டர்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மக்கள் இனம் புரியாத காய்ச்சலால் பலியாவதை தடுக்க இயலவில்லை. டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாமல் இன்றைக்கு 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் டெங்கு பீதியடைந்திருக்கிறார்கள்.
இதனால் ஊழல் அமைச்சர் விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறை ஒட்டுமொத்தமாக செயலிழந்து விட்டது. இந்நிலையில் அரசு மருத்துமனைகளில் டெங்கு பாதிப்பிற்காக அட்மிட் ஆகியிருப்பவர்களை விட தனியார் மருத்துவனைகளில் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று அதிர்ச்சி இப்போது தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, இனியும் வேடிக்கைப் பார்க்காமல் சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ‘அது அமைச்சரின் இலாகா. நமக்கு என்ன கவலை’, என்று மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தாமல், தமிழக மக்களைக் குலை நடுங்க வைத்துள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே முன்னின்று, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, டெங்கு பாதிப்பை முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.