Advertisment

திமுக-வை வம்புக்கு இழுக்க ஓ.பி.எஸ்-க்கு எந்த தகுதியும் இல்லை : மு.க ஸ்டாலின் ஆவேசம்

திமுக-வின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு 'ஆளவட்டம்' போடும் முயற்சியை கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin,

தனக்கும், எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி என்று ஓபிஎஸ் கூறுவது தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது" என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உளறிக் கொட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

ஆக்கபூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடிபிடிக்க ஆசைப்படும் அவர் அசிங்கமான குற்றச்சாட்டைக் கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசின் முகத்திரையை தினமும் கிழித்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வாய்க்கு வந்தபடி பேசி அலைகிறார்.

சட்டமன்றத்திற்குள் நடக்கும் திமுகவின் ஆக்கபூர்வமான விவாதங்களை, அரசின் மீது கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயன்று வருவோரின் பட்டியலில் இலவச இணைப்பாக ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.

ஆனால் தமிழகத்தில் பாஜகவின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் திமுகவை வீணாக வம்புக்கு இழுத்து டெல்லியில் உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பது மட்டும் நன்கு தெரிகிறது.

கூவத்தூரில் மிகப்பெரிய கொண்டாட்டம் நடத்தி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தபோது ரகசிய கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பாடுபட்டவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அவரது சமாதியில் ஒரு மவுன விரத நாடகத்தை நடத்தி விட்டு, பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கொள்ள இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஓ. பன்னீர்செல்வம்.

அந்த பேச்சுவார்த்தை அம்பலத்திற்கு வந்ததும் ஒரு கமிட்டியை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தியதும் இதே பன்னீர்செல்வம்தான். இப்போது முதல்வர் பதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன், கமிட்டி கலைப்பு, இணைப்பு கிடையாது என்றெல்லாம் வெளியில் கதை அளந்துவிட்டு, திரைமறைவில் இன்னமும் இணைப்பதற்கு ஹோட்டல் ஹோட்டலாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருபவர் ஓ. பன்னீர்செல்வம்தான்.

ஒன்றுகூடி தமிழகத்தை கொள்ளையடித்த இரு அணிகளின் சார்பிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைதூக்கி நின்றபோது எந்த மாதிரி ரகசிய கூட்டணியை எடப்பாடி பழனிசாமியுடன் அவர் வைத்துக் கொண்டார்? அதிமுக-விற்குள் உள்ள இரு அணிகளுக்கும் இடையில் உள்ள ரகசிய கூட்டணியின் வெளிப்பாடுதான் அப்படி இருவரும் டெல்லியில் நின்று காட்சியளித்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? ஓ. பன்னீர்செல்வம் ஊழலில் திளைத்து விட்டு உத்தமம் வேடம் போடலாமா?

ஆர்.கே.நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது பற்றி நான் பிரச்னை எழுப்பியபோது ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில்தான் இருந்தார். அப்போது ஏன் வழக்குபோட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை?

சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கேள்விகேட்க துணிச்சல் இல்லாத ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போய் நின்று கொண்டு 'ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் ரகசிய கூட்டணி' என்று பேசுவது திமுகவிற்கு கிடைத்துவரும் மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களின் வழிகாட்டுதலில் கூறும் உப்புச்சப்பு இல்லாத குற்றச்சாட்டு.

குட்கா டைரி ஊழல், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை திமுக எழுப்பியபோதெல்லாம் மவுன விரதம் இருந்து விட்டு, இன்றைக்கு அபாண்டமான குற்றச்சாட்டுகளில் ஓ. பன்னீர்செல்வம் ஈடுபடுவது அரசியலில் விபத்தால் கிடைத்த இடமும் பறிபோய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்று புரிகிறது.

ஆனால், மணல் குவாரிகள் ஊழல், பொதுப்பணித்துறை முறைகேடுகள், சேகர் ரெட்டி தொடர்புகள், முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டே கூவத்தூரில் கோடி கோடியாக பணம் கொடுக்க ரகசியமாக ஒத்துழைப்பு வழங்கியது போன்ற பயங்கரமான வழக்குகளில் தான் மாட்டிக்கொள்ள நேரிடும் என்ற அச்சத்தில் தான் தப்பித்துக் கொள்வதற்காக இல்லாத கூட்டணியை இருப்பது போல் சித்தரிக்க முயலும் ஓ.பன்னீர்செல்வம் இந்த ரவுண்டிலும் தோல்வியை தழுவுவார் என்பதில் சந்தேகமில்லை.

உள்ளபடியே, எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்தால் அரசு மீது சட்டமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைக்க அஞ்சுவது ஏன்? சேகர் ரெட்டியின் மணல் குவாரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி முதமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நேருக்கு நேர் கேள்வி எழுப்பாதது ஏன்? ஆகவே திமுகவின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, டெல்லியில் உள்ளவர்களுக்கு 'ஆளவட்டம்' போடும் முயற்சியை கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன்.

ஊழலில் ஒன்றாக திளைத்தவர்கள், துறைவாரியாக பட்டியல் போட்டு வசூலித்தவர்கள், சதவீத கணக்கில் காண்டிராக்டில் ஊழல் பணத்தை சேர்த்தவர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு சசிகலா குடும்பத்திற்கு கோடி கோடியாக சம்பாதித்து கொடுத்தவர்கள் இன்றைக்கு புனித வேடம் போட்டுக் கொள்ளட்டும். அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை.

ஆனால், அந்த ஊழலில் மூழ்கிக் கிடக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு திமுகவை வம்புக்கு இழுக்க எந்த தகுதியும் இல்லை என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால் முதலில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவாவது முன்வரட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment