ஏரியை பார்வையிடச் சென்ற மு.க.ஸ்டாலின் கைது!

சட்டம் ஓழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தொகுதியில் திமுகவினர் தூர் வாரிய கட்சராயன் ஏரியை இன்று பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் செல்லும் வழியில் கோவை கனியூரில் ஸ்டாலின் வந்த போது, அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. பின் அவரை போலீசார் கைது செய்தனர்.

சட்டம் ஓழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், எடப்பாடியில் உள்ள தூர் வாரிய கட்சராயன் ஏரியை ஸ்டாலின் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சேலம் எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து மு.க.ஸ்டாலின், கழக மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

அதில், “எடப்பாடி தொகுதியில் கழகத்தினர் தூர் வாரிய கட்சராயன் ஏரியை பார்வையிட தற்போது சென்று கொண்டிருக்கிறேன்.

ஒரு வேளை அதற்கு முன்பு என்னை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தால், அதை கண்டிக்கும் வகையில் கழகத்தினர் போராடி கைது ஆகாமல் , ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு மாணவர்களுக்கான நீட் தேர்வை எதிர்த்து இன்று மாலை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்று அந்தப் போராட்டத்தை மகத்தான வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

திமுக சார்பில் தூர்வாரப்பட்ட இந்த ஏரியை தமிழக அரசு குடிமராமத்து பணிகளுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close