சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட ஒருவார காலம் கெடு விதித்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சந்தித்தார். திமுக-வுடன், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் சென்றன. இந்த சந்திப்பிற்கு பின்னர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை என அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். குடியரசுத் தலைவரிடமும் இது தொடர்பாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் 19 பேர் கலந்து கொண்டதாக தகவல் வந்தது. இதனிடையே டிடிவி தினகரன் அணியில் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்தது. இதையடுத்து, அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் பின்னர் ஒரு எம்.எல்.ஏ எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றதாக தகவல் கிடைத்தது. எப்படி பார்த்தாலும 21 எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சரை ஏற்கவில்லை.
திமுக சார்பில் 89 எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸ் சார்பில் 8 எம்.எல்.ஏ-க்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 98 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் 21 பேர் உள்ளர். ஆக மொத்தம் 119 எம்.எல்.ஏ-க்கள் இந்த ஆட்சிக்கு எதிராக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு 114 மற்றும் எதிர்ப்பு 119 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். 114 பெரியதா அல்லது 119 பெரியதா என்பதை தான் இன்று ஆளுநரிடத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம்.
இந்த பிரச்சனையில், சட்டமன்றத்தை கூட்டி பெரூம்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். இது தொடர்பான நடடிவக்கை ஒரு வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்திதையும் நாடுவோம், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்று கூறினோம் என்றார்.