மு.க.ஸ்டாலின் இன்று திடீர் சார்ஜா பயணம் ஏன்? என்பது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. புத்தக திருவிழா ஒன்றில் அவர் பங்கேற்கிறார்.
தமிழகம் முழுக்க வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று (2-ம் தேதி) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சில இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் உதவிகளை வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 3) காலை 9 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் துர்கா ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர்கள் சென்றனர். துபாய் வழியாக லண்டனுக்கு சென்று, வழக்கமான மருத்துவ பரிசோதனையை ஸ்டாலின் செய்யவிருப்பதாக தகவல்கள் பரவின.
மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது..
இந்தச் சூழலில் மு.க.ஸ்டாலின் பயணம் குறித்து திமுக தலைமை அலுவலகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :
ஐக்கிய அரபு எமரேட்சில் உள்ள சார்ஜாவில் ஆண்டு தோறும் 11 நாட்கள் சர்வதேச புத்தக திருவிழா நடைபெறுவது வழக்கம். உலகின் பல நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பங்கேற்க கழகச் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை சார்ஜா அரசு நிர்வாகம் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.
புத்தக திருவிழாவில் பங்கேற்பதுடன், சர்வதேச புத்தக வாசிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு தனக்கு அன்பளிப்பாக வந்த 1000 தமிழ் புத்தகங்களை சார்ஜா புத்தக ஆணையத்திற்கு வழங்குவதற்காக இன்று (3-ந்தேதி) சார்ஜாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் எப்போது சென்னை திரும்புவார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மழைச் சேதங்கள் சூழ்ந்திருக்கும் இந்தச் சூழலில் அவரது வெளிநாட்டுப் பயணம் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. ஏற்கனவே 2015 டிசம்பரில் சென்னையில் மழைச் சேதம் உச்சத்தை தொட்டபோது, ஸ்டாலின் கேரளாவில் முகாமிட்டிருந்தது விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
சார்ஜாவின் புத்தக விழாவை முடித்துக்கொண்டு, அவர் லண்டன் சென்று வரும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.