சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்... முக ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-18 ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டம் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவது போன்றநிலை உருவாகியிருக்கிறது.

இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கிய 15 ஆவது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை 11.5.2017 அன்றுடன் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் இறுதி செய்து வைத்திருப்பது அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள மிக மோசமான ஜனநாயக விரோதச்செயல் என்பதால், பிரதான எதிர் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

2011 முதல் 2016 வரை உள்ள அதிமுக ஆட்சியில் 191 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்றிருக்கிறது. இது அதிமுக அரசு சட்டமன்ற ஜனநாயகத்தை எவ்வளவு மோசமாக அவமதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

இந்த ஜனநாயக விரோத செயலை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் தட்டிக் கேட்காமல் இப்போதைய சட்டமன்ற கூட்டத்தொடரை இறுதி செய்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. ஜனநாயக மரபுகளையும், சட்டமன்ற மரபுகளையும் பாதுகாக்கவும், நிலைநாட்டவும் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தை இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவது மிகவும் கவலையளிக்கும் போக்காக அமைந்துள்ளது.

தமிழக அரசின் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை 16.3.2017 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதங்கள் முடியப் போகிற நிலையில், இன்னும் துறை சார்ந்த மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவில்லை. அதன் மீது சட்டப்பேரவை விதிகளின் படி வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. ஆனால் திடீரென்று சட்டமன்றக் கூட்டத்தொடர் மட்டும் இறுதி செய்து வைக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்வது, அது தொடர்பாக துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடத்துவது, பிறகு அவற்றை வாக்கெடுப்பிற்கு விடுவது போன்ற மிக முக்கியப் பணிகள், வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்வதற்காக கூட்டப்படும் கூட்டத்தொடருடன் தொடர்புடையது. ஏனென்றால், மானியக் கோரிக்கைகளுக்கு இசைவு அளிக்கவோ, மறுக்கவோ உள்ள அதிகாரம் சட்டப்பேரவைக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக சட்டப்பேரவை விதிகள் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.

அரசுக்கு நிதி அதிகாரத்தை வழங்கும் சட்டப்பேரவையின் கூட்டத்தையே இப்படி அலட்சியமாக இறுதி செய்து வைத்திருப்பது மாநிலத்தின் நிதி நிர்வாகத்தின் மீதும், சட்டமன்றத்தின் இறையான்மை மீதும் இந்த அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

வரவு – செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகளின் விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2017-18 ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டம் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவது போன்றநிலை உருவாகியிருக்கிறது. கடும் வறட்சி, தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் என்று தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில் வரவு செலவுத்திட்டத்தின் படி செய்ய வேண்டிய செலவுகள், தீட்டப்பட வேண்டிய திட்டங்கள் எல்லாம் முடங்கிப் போகும் பேராபத்தை அதிமுக அரசு திட்டமிட்டு உருவாக்குகிறது.

சட்டப்பேரவை கூட்டம் இறுதி செய்யப்படுவது மாநில அரசு நிர்வாகத்தைப் பாதிக்கும், நிதி நிர்வாகத்தை மேலும் சீர்கெடச் செய்யும் என்பது பழுத்த அனுபவம் உள்ள மாண்புமிகு பொறுப்பு ஆளுநருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் ஆளுநர் அவர்களும் இந்த அரசை தட்டிக் கேட்காமல் சட்டமன்ற கூட்டத்தொடரை இறுதி செய்து வைத்திருப்பது தமிழகத்தைப் பற்றியும், தமிழக மக்களின் நலன் பற்றியும் யாருக்கும் கவலையில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மாநில நிதி நிர்வாகத்தை கண்காணிப்பது சட்டப்பேரவையின் தலையாய கடமை என்ற அடிப்படை நோக்கத்தின் விளைவாகவே வரவு செலவுத்திட்டம் பற்றிய விவாதங்கள் பத்து நாட்களுக்கு குறையாமலும், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதங்கள் 30 நாட்களுக்கும் நடைபெற வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவை விதிகளில் விளக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் நிதிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதுடன், நிர்வாகரீதியாக உள்ள குறைபாடுகளும் அந்த விவாதங்களின் போது அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு அரிய வாய்ப்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அந்தக் கூட்டம் அமைகிறது. இந்த நடைமுறைகள் முடிந்து மானியக் கோரிக்கைகள் அனைத்தும் சட்டப் பேரவையால் ஏற்கப்பட்டவுடன் “நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு” கொண்டு வரப்படும் என்றும், நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படும் என்றும் அரசியல் சட்டப்பிரிவு 204 தெளிவுபடுத்துகிறது.

சட்டமன்றக் கூட்டத்தொடரை இறுதி செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இப்போது இல்லை. ஆனால் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திற்குள் நுழைந்த வைரவிழாவை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டாடவிருப்பதால், தலைவர் கலைஞர் அவர்களின் வைரவிழா பற்றிய பதிவுகளை கழக சட்டமன்ற உறுப்பினர்களும், தோழமைக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பதிவுசெய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், “தள்ளுமுள்ளு” நடத்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அதிமுக ஆட்சி நயவஞ்சகத்துடன் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரை இறுதி செய்து வைத்திருக்கிறது.

தன் இளம் வயதிலேயே ஜனநாயக தீபத்தை ஏந்திய தலைவர் கலைஞர் அவர்களின் வைரவிழா சட்டமன்ற பதிவேடுகளில் பதிவாகி விடக்கூடாது என்ற குறுகிய நோக்குடன் செயல்படும் அதிமுக ஆட்சி, தமிழகத்தின் நிதி நிர்வாகத்தை மேலும் முடக்கும் நோக்கத்தில் செயல்பட்டிருப்பது வெட்கக் கேடானது மட்டுமல்ல- அரசியல் நாகரிகத்திற்கு அறவே சம்பந்தம் இல்லாத செயல் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆளுக்கொரு பேட்டி கொடுக்கும் அமைச்சர்களை வழி நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் முதலமைச்சர், இது போன்ற குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படாமல் தமிழகத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கும், மானியக் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து- குறிப்பாக தமிழக மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை மனதில் கொண்டு உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கனவே 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கும் தமிழகத்தில் “வருவாய் மேலும் குறையும்” என்று இன்றைக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதால் தமிழக நிதி நிலைமை மேலும் மோசமடையும் ஆபத்து உருவாகியிருப்பதை இப்போதாவது உணர்ந்து, மானியக் கோரிக்கைகளை விவாதித்து வாக்கெடுப்பு நடத்த மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close