/tamil-ie/media/media_files/uploads/2017/07/MK-Stalin-1.jpg)
ஏ.டி.பி. டென்னிஸ் ஓபன் போட்டியை, தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தெற்காசியாவில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் சென்னை ஓபன் போட்டித் தொடர் திடீரென்று இந்த வருடம் மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு மாற்றப்படுகிறது என்ற வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த போட்டி கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 21 ஆண்டுகளாக நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. சென்னையில் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் ரசிகர்களால் தமிழகத்திற்கு குறிப்பாக, சென்னை மாநகரத்திற்கு பெருமை கிடைத்து வந்தது. இந்த போட்டியை நடத்துவதற்கு தொடர்ந்து மாநில அரசின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் போட்டி அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியை புனேக்கு மாற்றி டென்னிஸ் ரசிகர்களையும், தமிழக டென்னிஸ் வீரர்களையும் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்குவது ஐ.எம்.ஜி. நிறுவனத்திற்கு அழகல்ல.
வர்த்தக நலன் என்றெல்லாம் கூறி மாற்ற நினைக்கும் இந்த முயற்சியை இதுவரை கண்டிக்காமல், தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் மூலமாக தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசும் மவுனமாக இருப்பது கண்டனத்திற்குரியது.
ஆகவே ஏ.டி.பி. டென்னிஸ் ஓப்பன் போட்டியை தொடர்ந்து சென்னையில் நடத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.