விசைத்தறி , கைத்தறி ஜவுளித் தொழில்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் சிறு-குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் முக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நேர்மையாக தொழில் புரிபவர்கள் கவலைப்படத் தேவையில்லை”, என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள் சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் உரையாற்றியிருக்கிறார்.
ஆனால் உச்சநீதி மன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் இப்படி பேசியிருப்பது ஆச்சர்யமாகவும், வியப்பாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருக்கிறது. இன்றைய ‘தமிழ் இந்து’ பத்திரிக்கையில் மத்திய நிதியமைச்சர் அவர்களின் மேற்கண்ட பேச்சு 11-ஆம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது.
அதே பத்திரிக்கையின் 9 ஆவது பக்கத்தில் ‘திருப்பூர் தொழில் துறையை முடக்கிய ஜி.எஸ்.டி. - சரிவை சந்திக்கும் பின்னலாடை நகரம்’, என்று ஒரு அதிர்ச்சி தரும் கட்டுரை வெளியாகியிருக்கிறது.
அந்தச் செய்தியில் ஆடிட்டர் பாலாஜி என்பவர் அளித்துள்ள பேட்டியில், “பனியன் துணிக்கு 5 சதவீதம் வரி. துணியை வெட்டிய பிறகு செஸ்ட், எம்ராய்டரிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் தொழில்களுக்கு 18 சதவீத வரி. பின்னலாடை உற்பத்தியைச் சார்ந்து தையல், பிரிண்டிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் திருப்பூரில் உள்ளன. ஆனால் நிட்டிங், டையிங், பிளீச்சிங், ரைஸிங், ரோல்வா சிங், காம்பேக்டிங், ரோட்டரி பிரிண்டிங் உள்ளிட்ட பல்வேறு பின்னலாடை சார்ந்த தொழில்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதம். குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் குடிசைத் தொழில் போல் தையல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு 18 சதவீதம் வரி. ஜாப் ஒர்க்கரின் ஆண்டு வர்த்தகம் 20 லட்சத்திற்குள் இருந்தாலும் ஜி.எஸ்.டி. பதிவெண் வாங்க வேண்டிய நிர்பந்தம் என்ற கவலையில் சிறு முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள்”, என்று ஜி.எஸ்.டி பாதிப்பு குறித்து தெளிவாக பேட்டியளித்துள்ளார்.
திருப்பூர் சிஸ்மா அமைப்பின் பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி, “மத்திய அரசின் முழக்கத்துக்கும் நடைமுறைக்கும் சம்பந்தமே இல்லை. ஜி.எஸ்.டி. யால் ஆதாயம் என்பது ஒரு மாயை. ஒரு தொழிலாளர் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் 3500 ரூபாய் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது”, என்று அபாயமணி அடித்திருக்கிறார்.
திருப்பூர் டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், “100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்பவர்களுக்கு 5 சதவீத வரியும், 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்பவர்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாப் ஒர்க் செய்யும் தொழிலாளர்கள் வேறு தொழில் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது”, என்று சுட்டிக்காட்டியுள்ளார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.விஜயகுமார் “பின்னலாடையின் சார்பு தொழில் பாதிக்கப்பட்டால் ஏற்றுமதியும் பாதிக்கப்படும்”, என்று பேட்டியளித்துள்ளார்.
இந்தப் பேட்டிகள், ஜி.எஸ்.டி. வரி வதிப்பால் தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில்கள், தொழிலாளர்கள், சிறு முதலீட்டாளர்கள் எல்லாம் எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. “மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களுக்கு இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எல்லாம் நேர்மையாக தொழில் செய்வோராகத் தெரியவில்லையா?”, என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.
மத்திய நிதியமைச்சரின் பேச்சு இப்படியிருக்க, மாநிலத்தில் உள்ள நிதியமைச்சர் ஜெயக்குமாரும் அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, தனக்கும் ஏதோ அதிகாரம் இருப்பது போல் ‘பாவ்லா’ காட்டியிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிலிருந்து எந்த வரி விலக்கையும், வரிக் குறைப்பையும் பெற்றுத்தர முடியாத கையாலாகாத நிதியமைச்சராக அவர் இருந்து வருகிறார்.
மாநிலத்தின் உரிமைகள், மாநிலத்தின் அதிகாரம் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையிலும் நிதியமைச்சருக்கும் சரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சரி நிமிர்ந்து நின்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் தைரியம் துளியும் இல்லை. தங்கள் தலைக்கு மேல் தொங்கும் ‘ஊழல் கத்திகளில்’ இருந்துத் தப்பிக்க, தமிழக மக்களின் நலன்களை, மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக அடகுவைத்து, ‘ஆட்சிக் கொண்டாட்டத்தில்’ ஈடுபட்டுள்ளார்கள்.
முதலமைச்சரின் தொகுதி இருக்கும் சேலம் மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, ஜவுளித் தொழிலாளர்கள், சிறு - குறு தொழில் செய்வோர் எல்லாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதுபற்றி காது கொடுத்துக் கூட முதலமைச்சர் கேட்கவில்லை.
ஜி.எஸ்.டி. வரியால் திருப்பூர் மாவட்டத்தின் பின்னலாடை தொழில் உள்பட தொழில்துறையே முடங்கிக் கிடக்கிறது. ஆனால் ‘சுயநலனுக்காக’ முதலமைச்சருக்கு இணையாக பிரதமரைச் சென்றுச் சந்திக்கும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திருப்பூரின் தொழில்துறை குறித்து கவலைப்படவில்லை.
மத்திய நிதியமைச்சரே தமிழகத்திற்கு வந்திருந்த நிலையில், அவரிடம் ஜி.எஸ்.டி.யால் தொழில் நகரம் பாதிக்கப்படுகிறது என்று நேரில் முறையிட்டு நிவாரணம் பெற மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு அருகதை இல்லை.
ஆகவே, எந்தத்தரப்பு மக்களுக்கும் பயனளிக்காத ஒரு ‘குதிரை பேர அரசு’ தமிழகத்தில் நடப்பதால், தமிழக மக்களின் நலன்கள் பறி போகின்றன. ‘கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி’, என்றப் போர்வையில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மாநில அரசின் வரி அதிகாரத்தையும், மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தையும் ஒட்டுமொத்தமாக பிடுங்கிக் கொண்டிருக்கிறது.
‘சரணாகதி’ படலத்தில் இருந்து மீண்டு, குறைந்தபட்சம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்குமான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘குதிரை பேர’ அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விசைத்தறி, கைத்தறி, ஜவுளித் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்யும் விதத்தில் உடனடியாக ஜி.எஸ்.டி. கவுன்சிலை கூட்டி வரியை குறைத்து, சிறு மற்றும் குறு தொழில்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.