நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் நிரந்த தீர்வு தேவை என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது: திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மாணவர் சமூகம் 'நீட்' எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருவதை தாமதமாக உணர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசிநேரத்தில் விழித்துக்கொண்டு, எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஓராண்டுக்கு மட்டுமாவது நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதற்காக, தங்கள் எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு ஒரு தற்காலிக தீர்வை காணுவதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். இது தமிழக சட்டப்பேரவையில் நிரந்தர தீர்வு காண நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு வெளிப்படுத்தும் உணர்வுக்கு எதிரானது ஆகும். தமிழ்நாடு கோருவது, மாநில உரிமை.
நமது மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை, நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படை கேள்வி. மாநில உரிமை பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி, கெஞ்சிக் கொண்டு இருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களை கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
“இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு வேண்டுமானால், நீ்ட்டில் இருந்து விதிவிலக்கு பெறலாம், நிரந்தரமான விலக்கு கேட்கக்கூடாது” என்று தமிழக பாஜக தலைவர் சகோதரி டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பா.ஜ.க.வின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல.
நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு. சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடி பணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக்கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்குச் செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூகநீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.