Advertisment

பொது விநியோகத் திட்டத்தில் புதிய நிபந்தனை... மக்களை பாதிக்கும் அரசிதழை திரும்பப் பெறுக: மு.க ஸ்டாலின்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மதிப்பீட்டின்படி, பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்க இந்த அரசு தீவிரமாக செயல்படுவது வேதனையளிக்கிறது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்தில் புதிய நிபந்தனைகள் விதித்து வெளியிட்டுள்ள அரசிதழை, தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய வரை முறைகளை வகுத்து, அரசிதழில் வெளியிட்டுள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசு, பொது விநியோகத் திட்டத்தில் மிக மோசமான குளறுபடிகளை உருவாக்கியிருக்கிறது.

ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், கடந்த 01.11.2016 அன்று அமல்படுத்திய அதிமுக அரசு, ‘நகர்ப்பகுதிகளில் 37.79 சதவீதம், கிராமப்பகுதிகளில் 62.55 சதவீதம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற பயனாளிகளை கண்டறிவோம்’, என்று அப்போதே மத்திய அரசிடம் ஒப்புக் கொண்டு விட்டது.அந்த அடிப்படையில் இப்போது குடும்ப அட்டைகள் யாருக்கு உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்ற கணக்கெடுக்கும் பணிக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

“தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட அரிசியின் அளவினை வழங்கும் அதே நேரத்தில், ஏற்கெனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி வந்த அரிசியின் அளவினை குறைக்காமலும், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் தன்மை மாறாமலும் விலையில்லா அரிசி வழங்கப்படும்” என்று அரசு அளித்த வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக இந்தக் கணக்கெடுப்பு விதிமுறைகள் அமைந்திருக்கின்றன.

ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த மாபாதகச் செயலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது ‘குதிரை பேர’ அதிமுக அரசு வெளியிட்டுள்ள இந்தப் புதிய அரசிதழ் அறிவிப்பின்படி, வீட்டில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் அந்தக் குடும்பத்திற்குக் குடும்ப அட்டை இல்லை.

அதேபோல், அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், வீட்டில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் போன்றோருக்கும் இனி குடும்ப அட்டை இல்லை. எல்லாவற்றையும் விட கொடுமையானது வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறு வோருக்கு இனி குடும்ப அட்டை இல்லை. அதாவது, மாதம் 8,334 ரூபாய் சம்பளம் வாங்குபவர் இனி குடும்ப அட்டையை பெறவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குமான வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்ட காரணத்தால் தமிழகத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பிலும் அளித்த உறுதிமொழியை, அதிமுக அரசு இரக்கமற்ற முறையில் எட்டி உதைக்க நினைக்கிறது.

இப்போது குடும்ப அட்டைகளை குறைத்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளையும் குறைத்து, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மதிப்பீட்டின்படி, பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்க இந்த அரசு தீவிரமாக செயல்படுவது வேதனையளிக்கிறது. அதற்காகத்தான் இந்தப் புதிய அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு பொருள் குறித்து அரசிதழில் ஆணை வெளிவந்து விட்டால், அதுவே இறுதியானது. அதைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது. செயல்படுத்தாத விதிமுறையை அரசிதழில் வெளியிட வேண்டிய அவசியமில்லை.

ஆனால் குடும்ப அட்டை பெறுவதற்கான இந்தப் புதிய விதிகள் வகுக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிட்டு விட்டு, அந்த விதிகள் கடைப்பிடிக்கப்படாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருப்பது நடப்பது ஆட்சியல்ல, ‘துக்ளக் தர்பார்’ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஏற்கனவே டூப்ளிகேட் குடும்ப அட்டைகளை நீக்குகிறோம் என்றும், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கூறி, குடும்ப அட்டைகளை முடக்கி வைத்து, அந்த அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுவது மனிதாபி மானமற்ற முறையில் நிறுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்து, அதுவும் கிடப்பில் போடப்பட்டு, ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன.

ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்காமல் தாய்மார்கள் எல்லாம் இன்றைக்கு வீதிக்கு வந்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கி றார்கள். இந்நிலையில் குடும்ப அட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நிபந்தனைகள் பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக சீரழித்து, கிராம மக்களுக்கும், ஏன் நகர்ப்புறத்தில் உள்ள மக்களுக்குமே கூட மோசமான பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது.

தமிழகத்தின் பொது விநியோகத் திட்டம் மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி நடந்தால், பல ஏழைக் குடும்பங்கள், நடுத்தர மக்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவரும் அரிசி வாங்க முடியாத நிலை ஏற்படும்.

வெளி மார்க்கெட்டுகளில் அரிசி விலை கடுமையாக அதிகரித்து வருகின்ற நிலையில், அதிமுக அரசின் இந்த நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேரிடியாக மாறியுள்ளது. மொத்தமுள்ள 1.95 லட்சம் குடும்ப அட்டைகள் இந்தப் புதிய அறிவிப்பின் படி கணக்கெடுக்கப்படும் போது அதிரடியாகக் குறைந்து, ஏழை எளிய மக்கள் பொது விநியோகத் திட்டத்தி லிருந்து அடியோடு விடுவிக்கப்படும் ஆபத்து உருவாகப் போகிறது. அதற்கான திரைமறைவு திட்டத்துடன்தான் இந்தப் புதிய விதிமுறைகளை ‘குதிரை பேர’ அதிமுக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஆகவே, பொது விநியோகத் திட்டத்தை நிலைகுலைய வைக்கும் வகையிலான புதிய விதிமுறைகள் அடங்கிய அரசிதழை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பொது விநியோகத் திட்டம் தொடரும் என்று சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்றவாறு, இப்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment