“கல்விக்கட்டணக் கொள்ளையை” உடனே தடுக்க வேண்டும்... முக ஸ்டாலின்

பெற்றோர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் கமிட்டிக்கு 15 மாதங்கள் ஏன் தலைவரை நியமிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்ற “மர்மம்” யாருக்கும் புரியவில்லை!

தனியார் பள்ளிகள் அத்துமீறி கட்டண வசூலில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனியார் பள்ளிகளில் மனம் போன போக்கில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் பெற்றோருக்கு பெரும் சுமையாக இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது “தமிழ்நாடு பள்ளிகள் (கல்விக்கட்டண வசூல் முறைப்படுத்தும்) சட்டத்தை” 7.12.2009 அன்று கொண்டுவந்து நிறைவேற்றினார்.

பெற்றோர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இயற்றப்பட்ட இந்த சட்டத்தின் அடிப்படையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் தலைமையில், தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் கமிட்டியும் அமைக்கப்பட்டு, தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதோடு நின்றுவிடாமல், அப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் தான் பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் வசூல் செய்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி கட்டண வசூல் பற்றி கண்டறியலாம் என்று சட்டப்படி அதிகாரம் அளிக்கப்பட்டது.

ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த சட்டத்தின் செயல்பாடு முடக்கி வைக்கப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் இந்த கமிட்டியின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலரின் பதவிக்காலம் நிறைவடைந்து பதினைந்து மாதங்களாகியும் புதிய தலைவரை நியமிக்காமல் கிடப்பில் போட்டிருந்தது.

செயலற்றுக் கிடந்த இந்த கமிட்டிக்கு கடந்த மார்ச் மாதத்தில்தான் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்காணிக்கும் கமிட்டிக்கு 15 மாதங்கள் ஏன் தலைவரை நியமிக்காமல் நிறுத்தி வைத்தார்கள் என்ற “மர்மம்” யாருக்கும் புரியவில்லை!

ஆனாலும் தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகள் முறையாக சோதனைகள் நடத்துவதில்லை என்றும், பல்வேறு விதமான கல்வி கட்டணங்கள், நன்கொடைகள் வசூல் செய்யப்படுகின்றன என்றும் பெற்றோர் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல தனியார் பள்ளிகள் கட்டணம் தொடர்பான தமிழக அரசின் சட்டத்தை கால் தூசுக்குக் கூட மதிக்காமல் தங்கள் விருப்பப்படி கல்விக்கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று பெற்றோர் குமுறுகின்றனர்.

ஐ.டி. கம்பெனிகளில் ஏற்படும் திடீர் வேலை இழப்பு, கடும் வறட்சியால் விவசாயம் பாதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு-குறு தொழில்கள் பாதிப்பு போன்ற பல பிரச்னைகளால் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அத்துமீறி கட்டண வசூலில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கல்விக் கட்டண வசூல் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு அதிமுக அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆகவே தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட “தமிழ்நாடு பள்ளிகள் (கல்விக்கட்டண வசூல் முறைப்படுத்தும்) சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி, பெற்றோரிடம் நடைபெறும் “கல்விக்கட்டணக் கொள்ளையை” உடனே தடுக்கும்படி அதிமுக அரசை கேட்டுக் கொள்வதுடன், முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதுகுறித்து உரிய ஆய்வுகளை நடத்தி, இந்த கல்வியாண்டில் பெற்றோர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வியில் பல சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்யும் பள்ளிக் கல்வித்துறை செயலாரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close