மு.க.ஸ்டாலின் - வைகோ 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் மேடையில் இன்று இணைந்து முழங்குகிறார்கள். ஆர்.கே.நகரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டம்தான் அது!
#மதவாத சக்திகளிடமிருந்து #திராவிட_இயக்கத்தை_காக்க #இணைந்த_கைகைள்!#DMK #Mkstalin #mdmk #vaiko #RKnagarByElection #Dmk4tn #MarudhuGanesh #RKNagarByPoll #RKNagar pic.twitter.com/HM8ugsxpPc
— Padalur Vijay (@padalurvijay) December 11, 2017
மு.க.ஸ்டாலின் - வைகோ இடையிலான அரசியல் உறவு கடந்த காலங்களில் சீராக இருந்தது இல்லை. கடந்த ஆண்டு கருணாநிதியின் பேரன் அருள்நிதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வைகோவை வீடு தேடிச் சென்று அழைத்தார் ஸ்டாலின். ஆனால் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் வைகோவுக்கு உரிய முறையில் ஸ்டாலின் மரியாதை கொடுக்கவில்லை என சர்ச்சை எழுந்தது.
மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, மக்கள் நலக் கூட்டணியை கட்டமைத்தார் வைகோ. அந்தத் தேர்தலில் திமுக.வின் தோல்விக்கு வைகோவின் ஆப்ரேஷனை முக்கிய காரணமாக திமுக.வினர் விமர்சித்தனர். வைகோவை சமூக வலைதளங்களில் திமுக.வினர் கடுமையாக மீம்ஸ்களையும் போட்டுத் தாளித்தனர்.
வைகோவும் திமுக மீதான ‘அட்டாக்’கை அதிகப்படுத்தியபடியே இருந்தார். அதன் எதிரொலியாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை பார்க்கச் சென்ற வைகோவை திமுக.வினர் விரட்டியடித்தனர். ஆனால் பாஜக எதிர்ப்பு என்கிற புள்ளியில் மீண்டும் வைகோவை சேர்க்க ஆயத்தமானார் ஸ்டாலின்.
வைகோவுக்கு மலேசிய விமான நிலையத்தில் அவமதிப்பு நிகழ்ந்தபோது, முதல் ஆளாக ஸ்டாலின் கண்டன அறிக்கைவ் விட்டார். அதன்பிறகு ஸ்டாலின் மீதான விமர்சனங்களை அடியோடு கைவிட்டார் வைகோ. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்பாடு குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ‘அவர் சிறப்பாக செயல்படுகிறார்’ என ‘சர்டிபிகேட்’ கொடுத்தார் வைகோ.
மு.க.ஸ்டாலினுக்கு இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. கடந்த ஆகஸ்டில் கருணாநிதியை சந்திக்க வைகோ அப்பாய்ன்மென்ட் கேட்டதும், உடனே கிடைத்தது. செப்டம்பர் 5-ம் தேதி முரசொலி விழாவில் ஸ்டாலினுடன் மேடையில் வைகோ தோன்றினார். ஆனாலும் அங்கு அரசியல் பேசாமல், முழுக்க கருணாநிதியுன் தனக்காக உறவு குறித்தே சிலாகித்தார் வைகோ.
இதன்பிறகு மதுரை விமான நிலையத்தில் ஒரு முறை, கோவை விமான நிலையத்தில் ஒருமுறை என ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு வைகோவுக்கு கிடைத்தது. கடைசியாக கோவை விமான நிலையத்தில் சந்தித்தபோது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக.வை ஆதரிக்க கேட்டுக்கொண்டார் ஸ்டாலின். அதை ஏற்று மதிமுக உயர்நிலைக் குழுவில் திமுக.வை ஆதரிக்க முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 7-ம் தேதி திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து ஆர்.கே.நகரில் திமுக.வின் முதல் பிரசார பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்தது. அந்தக் கூட்டத்தை பிறகு டிசம்பர் 11-ம் தேதிக்கு ஸ்டாலின் தள்ளி வைத்தார். அதன்படி இன்று (டிசம்பர் 11) மாலை 5 மணிக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர் சந்திப்பில் திமுக.வின் பிரசாரப் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் திமுக.வின் தோழமைக் கட்சித் தலைவர்களில் ஒருவராக ஸ்டாலினுடன் வைகோ மேடையேறுகிறார். ஸ்டாலினும், வைகோவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அரசியல் மேடையில் சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 நாடாளுமன்றத் தேர்தலை திமுக.வுடன் இணைந்து சந்தித்த வைகோ, 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக.வுடன் அணி அமைத்தார். அதன்பிறகு கடந்த 11 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அவர் இல்லை. கடைசியாக 2005-ம் ஆண்டு நடைபெற்ற காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக.வுக்கு பிரசாரம் செய்தார் வைகோ!
திமுக தலைவர் கருணாநிதி, ஆக்டிவாக இருந்த காலகட்டம் அது! காஞ்சிபுரம் தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு திமுக சார்பில் ஸ்டாலின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றிருந்தார். அவரே முன்னின்று அங்கு கருணாநிதி மற்றும் திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். கருணாநிதி, வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்டாலினும் பேசினார்.
2005-ல் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வைகோவும், ஸ்டாலினும் முழுமையான அரசியல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் இன்றுதான் பேசுகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் மாதிரி இந்தக் கூட்டத்தை ‘குறிஞ்சி மலர்’ பொதுக்கூட்டமாக மதிமுக.வினர் வர்ணிக்கிறார்கள். வைகோ, ஸ்டாலின் ஆகியோர் படங்களுடன், ‘இணைந்த கைகள்’ என தலைப்பிட்டு பிரமாண்ட போஸ்டர்களையும் மதிமுக.வினர் வெளியிட்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் - வைகோ இருவரும் இணையும் இந்தக் கூட்டத்தில் இருவரின் பேச்சும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு, வ.உ.சி. நகர் சந்திப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், சுபவீரபாண்டியன், பொன் குமார், எஸ்றா.சற்குணம், அதியமான், கு.செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், டாக்டர் சேதுராமன், பி.வி.கதிரவன், அம்மாவாசி, பஷீர் அகமது, இனிகோ இருதயராஜ் ஆகி யோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம் செய்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.