மு.க.ஸ்டாலின் - வைகோ இடையே மதுரையில் திடீர் சந்திப்பு நிகழ்ந்தது. அண்மைகாலமாக இருவருக்கும் இடையே இறுகி வரும் உறவு, கூட்டணியாக மலரும் என்றே பலரும் கூறுகிறார்கள்.
மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 7) மாலையில் மதுரைக்கு கிளம்பிச் சென்றார். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவையொட்டி மதுரையில் நாளை திமுக.வினர் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக இன்று இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலின் வந்து இறங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் நேற்று தனது தாயார் மாரியம்மாள் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சென்னை செல்வதற்காக அதே வேளையில் மதுரை விமான நிலையம் வந்தார்.
எதேச்சையாக அங்கு ஸ்டாலினை வைகோ சந்தித்தார். ஸ்டாலின் கையை இறுகப் பற்றி நலம் விசாரித்த வைகோ, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மனைவி தயாளு அம்மாள் ஆகியோரின் உடல் நிலையை கேட்டறிந்தார். பிரதமர் மோடி கோபாலபுரம் வருகை தந்து, கருணாநிதியை சந்தித்தது குறித்தும் வைகோ விசாரித்ததாக தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதி, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அங்கு சென்ற வைகோவை திமுக.வினர் அவமரியாதை செய்து பார்க்க விடாமல் செய்தனர். அதன்பிறகு வைகோ-திமுக இடையிலான மோதல் உக்கிரம் ஆனது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்து வைகோ நலம் விசாரித்தபிறகு இரு கட்சிகள் இடையிலான நேரடி மோதல் முடிவுக்கு வந்தது.
வைகோ நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நான் கலைஞரை சந்தித்த பிறகு அவரது உடல் நிலை வேகமாக முன்னேறி வருகிறது’ என தெரிவித்தார். அந்த அடிப்படையில் மீண்டும் ஒரு முறை கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்திக்க வைகோ விருப்பம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். அண்மைகாலமாக ஸ்டாலினுடன் உறவை பேண ஆரம்பித்திருக்கிறார் வைகோ.
எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் வைகோவிடம் கேட்கப்பட்டபோது, ரொம்பவே பாசிட்சிவாக பதில் சொன்னார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் மதிமுக இடம்பெறும் வாய்ப்பு அதிகரித்து வருவதையே இவர்களின் இணக்கம் காட்டுகிறது.