Advertisment

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் மாணவ- மாணவிகள் பங்கேற்க இடைக்கால தடை : மு.க ஸ்டாலின் வரவேற்பு

அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவ- மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு எந்த கல்வி அதிகாரிகளும் துணை போகக்கூடாது

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

எதிர்காலத்தில் அரசு விழாக்களுக்கு, அதிலும் குறிப்பாக இதுபோன்ற அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவ- மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு எந்த கல்வி அதிகாரிகளும் துணை போகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் மாணவ- மாணவிகள் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். நூற்றாண்டு விழா என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடுவதற்குப் பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயபுராணம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, அதிமுக-விற்குள் நடக்கும் உட்கட்சி பூசலுக்கும், தி.மு.க.வை விமர்சிப்பதற்கும் கிடைத்த அரசியல் மேடையாக மாற்றி அரசுப் பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக சார்பில் ஏற்கனவே கண்டித்து அறிக்கை வெளியிட்டும், இன்னும் அரசியல் விழாக்களாகவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுபோதாது என்று மாணவ - மாணவிகளை தொலைதூரங்களில் இருந்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களில் அழைத்து வந்து மணிக்கணக்கில் காக்க வைத்து, இங்கே கூடியிருக்கின்ற கூட்டமே இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டுகிறது என்று பொய் வேடம் புனைந்து வருகிறது இந்த குதிரை பேர அதிமுக அரசு.

மாணவ மாணவிகளை இன்னல்களுக்கு உட்படுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத் தீர்ப்பு முழு மனதோடு வரவேற்கப்பட வேண்டியதாகும். எதிர்காலத்தில் அரசு விழாக்களுக்கு, அதிலும் குறிப்பாக இதுபோன்ற அரசியல் பேசும் விழாக்களுக்கு மாணவ- மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களது கல்வி பாழாவதற்கு எந்த கல்வி அதிகாரிகளும் துணை போகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். 

இது ஒரு புறமிருக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில் வடசென்னையில் 20 குழந்தைகளை நிர்பந்தப்படுத்தி அலகு குத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளானது. அந்த விசாரணையில் ஆணையமே உத்தரவிட்டும், வலுக்கட்டாயமாக அலகு குத்துவதை வேடிக்கை பார்த்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல், பெற்றோர் சம்மதத்துடன்தான் அந்த நிகழ்வில் குழந்தைகள் கலந்து கொண்டார்கள் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரே வாதிட்டிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

குழந்தைகளின் மனித உரிமை மீறும் செயல்களில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையே காப்பாற்ற நினைப்பது வேதனைக்குரியது. ஆகவே 20 குழந்தைகளை கட்டாயப்படுத்தி அலகு குத்த வைத்த வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணைய உத்தரவில் குறிப்பிட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Mk Stalin Dmk Mgr Madras High Court Mgr Centenary
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment