தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவர் நடுநிலை வகிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், மேகாலயா, அசாம், அருணாச்சலப் பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, தமிழக புதிய ஆளுநராக் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக இருந்து வருகிறார். அசாம் ஆளுநராக பணியாற்றிய இவர், நாக்பூர் லோக்சபா தொகுதியில் இருந்த 3 முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். தொடக்கத்தில், இவர் அகில இந்திய பார்வர்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் இருந்த இவர், கடந்த 1991-ஆம் ஆண்டில் பாஜக-வில் இணைந்தார்.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவர் நடுநிலை வகிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, இன்று அனைத்துத்துறைகளிலும் தமிழகத்தின் முன்னேற்றம் தேக்க நிலைமைக்கு வந்துவிட்டது.
“234 சட்டமன்ற உறுப்பினர் பலம் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், 113 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கிறது”, என்று தேர்தல் ஆணையத்தில், முதலமைச்சரின் அணி சார்பில் வெளிப்படையான பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கின்ற இந்த நேரத்தில், பதவியேற்கும் புதிய ஆளுநர் அவர்கள் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.