பிறந்தநாள் கொண்டாடும் வைரமுத்து: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சமூக அக்கறையுடன் படைப்புகளை வழங்குபவர். தமிழில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட வெற்றியாளர்.

“கவிப்பேரரசு” என்றழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைரமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “திரைப்பாடல் வழியாகவும், இலக்கியப் படைப்புகள் வழியாகவும் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்து நின்று, தமிழின் பெருமையை இந்திய அளவிலும் உலக அளவிலும் உயர்த்தும் பணியில் சிறப்பாகவும் பொறுப்பாகவும் செயல்பட்டு வரும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இனிய பிறந்தநாள் (ஜூலை 13) வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறந்த பாடலாசிரியராக 7 முறை தேசிய விருது பெற்ற சாதனையாளர். மத்திய-மாநில அரசுகளின் விருதுகள் பலவற்றைப் பெற்ற பெருமைக்குரியவர். சமூக அக்கறையுடன் படைப்புகளை வழங்குபவர். தமிழில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்ட வெற்றியாளர். பன்முகத்தன்மை கொண்ட கவிப்பேரரசு அவர்கள் கலைஞரை தனது தமிழ் ஆசானாக ஏற்று, திராவிட இயக்கத்தின் வழி வந்த படைப்பாளியாகத் தன்னை முன்னிறுத்தியவர். அத்தகையப் பெருமைக்குரிய கவிப்பேரரசு அவர்கள் இன்னும் பல சிறந்த படைப்புகளைத் தமிழுக்கு வழங்கும் வகையில் பல்லாண்டுகள் வாழ அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கவிஞர் வைரமுத்துவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

×Close
×Close