இஸ்லாமியர்களுக்கு திமுக என்ன செய்தது? வாழ்த்துடன் ஸ்டாலின் விளக்கம்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”

இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் உயரிய பண்புகளை உலக அரங்கில் வெளிப்படுத்தி இரமலான் திருநாளை இன்பத்துடனும், எழுச்சியுடனும் கொண்டாடுவதை எண்ணிப் பார்க்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் உள்ள உறவு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்திலிருந்து கைப்பற்றி நடைபோட்டுக் கொண்டிருப்பதை இந்தநேரத்தில் நினைவுகூர்ந்து, தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது என்றும் அன்பும், பாசமும் செலுத்திவரும் சிறுபான்மையின மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களையும், சிறப்பு சலுகைகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

அத்தனைத் திட்டங்களையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிட இயலாது என்றாலும் முத்தான சிலவற்றை மட்டும் இங்கே மீண்டும் எடுத்துரைக்க விரும்புகிறேன். 1969-ல் மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது; அதன்பிறகு வந்த அதிமுக அரசு ரத்து செய்தாலும், மீலாதுநபி அரசு விடுமுறையை 15.11.2006 அன்று அரசாணை மூலம் மீண்டும் அறிவித்தது; உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது;

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் சமுதாய மக்கள் பெரும்பயன் எய்தும் வகையில் “சிறுபான்மையினர் நல ஆணையம்” தொடங்கியது; ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கையை 2000 என்பதிலிருந்து 2400 வரை உயர்த்தியது; வக்ஃபு வாரிய சொத்துகளைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக 40 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கியது; ஹஜ் புனிதப் பயணத்திற்குக் குலுக்கல் முறையில் ஆண்டிற்கு 1800 பேருக்கு மிகாமல் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட முறையைக் கைவிட்டு, 1999 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கியது;

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் இருந்து தனியே பிரித்து, இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 1.7.1999 அன்று அமைத்தது; இஸ்லாமியரின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டு, 21.7.2000 அன்று “உருது அகாடமி” தொடங்கியது; 2001-ல் ’காயிதே மில்லத் மணிமண்டபம்’ 58 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவில் சென்னையில் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, பின்னர் கட்டிமுடிக்கப்பட ஆவன செய்தது; 2007-ல் இஸ்லாமியர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 விழுக்காட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இன்று இஸ்லாமியர்கள் அரசுக் கல்வி நிறுவனங்களில் உரிய இடங்களைப் பெறவும், தமிழக அரசுப் பணிகளில் தங்களுக்குரிய பங்கினைப் பெற்று வளம்பெறவும் வழிவகுத்தது என்று எண்ணற்ற அரிய சாதனைகளை பட்டியலிடலாம்.

இஸ்லாமிய மக்களின் உயர்வுக்காக என்றும் பாடுபடுகின்ற உரிமையுடனும் உணர்வுகளுடனும், தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில், எனது நெஞ்சார்ந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி, கழகம் என்றைக்கும் சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக துணைநிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close