பயங்கரவாத செயல்களுக்கு துணை போகும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்காகவும், அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் கூறி, கத்தார் நாட்டுடனான தூதரக உறவை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய 5 நாடுகள் திடீரென துண்டித்தன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "கத்தாரில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்குள்ள தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன ஆனதோ என்ற விவரம் தெரியாமல் இங்குள்ள அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர். எனவே, கத்தாரில் ஆறரை லட்சத்திற்கும் மேல் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.