/tamil-ie/media/media_files/uploads/2017/05/a58-1.jpg)
Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நீரின்றி அமையாது உலகு என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. வரப்புயர நீர் உயரும் என்றுதான் மக்களைக் காக்கும் மன்னனை வாழ்த்தினார் அவ்வையார். மக்கள் நலனில் அக்கறையுள்ள எவர் ஒருவரும் நீர் நிலைகளைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் அக்கறை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. பொதுவாழ்வில் இருப்போர் இதில் ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீருக்கும் சேர்த்தே பாடுபடுகிறார்கள் என்றே கருதவேண்டும். "ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன்” என்று பராசக்தி படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய உரையாடல் வரிகள் இன்றைய நிலையில் நீர் மேலாண்மைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
தனி மனிதர்கள் தொடங்கி, பொதுநல அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பிலும் தமிழகத்தில் நிலவும் வறட்சியையும் குடிநீர்ப்பஞ்சத்தையும் போக்க இயற்கை வளங்களான நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனக் குரல் கொடுப்பதுடன் அதற்கான செயல்பாடுகளிலும் இயன்ற அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளால் கடந்த ஆறு வருடங்களாக தமிழகத்தின் ஆறுகள் எல்லாம் பாலை நிலங்களாக, அதுவும் மணல்கூட இல்லாத பாலை நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனையாகும்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் வேளாண்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை போன்றவற்றில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளாலும் இன்றைக்கு தமிழக மக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பாசனத்திற்கு நீர் கிடைக்காமலும் தவிக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 34 ஆறுகளும், 89 அணைகளும் உள்ளன. அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களும் நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. கிராமங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரணிகள், குட்டைகள் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
தமிழகத்தின் நெடுங்கால நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டான இவற்றில் பல ஏரிகள் இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமலேயே ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்காக சில நீர் நிலைகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது ஒரு புறமிருக்க, தண்ணீர் தேவைக்கும் நிலத்தடி நீர் அதிகரிப்பதற்கும் காரணமான ஊரணிகளையும், குட்டைகளையும் பராமரிக்க அதிமுக அரசு முற்றிலும் தவறி விட்டது. பருவமழை பொய்த்துள்ள நிலையில், இவற்றை தூர் வாருவது குறித்தோ அல்லது பாதுகாப்பது குறித்தோ அதிமுக அரசு கடந்த ஆறு வருடத்தில் ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை.
கடந்த ஐந்து வருட அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நீர் மேலாண்மைக்காக 3500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. அந்தப் பணிகள் உருப்படியாக நடைபெற்றிருந்தால், கடந்த 2015 டிசம்பரில் பெய்த கனமழையினால் கிடைத்த தண்ணீரை கடலில் வீணாகக் கலக்காமல் சேமித்து வைத்திருக்க முடியும். அ.தி.மு.க அரசு உருவாக்கிய செயற்கை பெருவெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட மக்கள் பேரழிவைச் சந்தித்த கொடூர நினைவுகள் இன்னும் மறையாத நிலையில், அவர்கள் உள்பட தமிழகத்தில் வாழும் பலரும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை இப்போது சந்தித்துக் கொண்டிருப்பதிலிருந்தே அ.தி.மு.க அரசின் நிர்வாக லட்சணத்தை காண முடியும்.
தமிழகத்தில் தொடர்ச்சியான நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்கும் வகையில் நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதை நிறைவேற்ற அதிமுக அரசு தயாராக இல்லை. அரசின் அலட்சியப் போக்கினாலும் இயற்கையின் பருவநிலை மாறுபாடுகளாலும் தமிழகம் மிகப்பெரிய குடிநீர் பிரச்சினையை சந்தித்து வருகிறது. தாய்மார்கள் காலிக்குடங்களுடன் போராடும் வேதனைக் காட்சிகளை மாநிலத்தின் பல பகுதிகளிலும் காண்கிறோம்.
தி.மு.கழக அரசு ஆட்சியில் இருந்தபோது அன்றைய முதல்வரான தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி, தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி செயல்பட்டார் என்பதை அவரது உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். உங்களில் ஒருவனான நானும் அறிவேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் ஏரிகள், குளங்களை தூர்வாரும் பணியை தீவிரமாக செயல்படுத்தியது. 1996-2001 ஆட்சிக்காலத்தில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை சீரமைக்க திட்டம் வகுத்து செயல்படுத்தியது. காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் பாசனத்திற்கான வாய்க்கால்களை கழக அரசு தூர் வாரியது போல எந்த அரசும் செய்யவில்லை என்பதை அப்போது மாற்றுக்கட்சியினரும் ஒப்புக்கொண்டனர் என்பது வரலாறு.
இன்றோ, அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகள் மூலமாக ஆண்டுதோறும் கடலில் கலக்கும் நீரின் அளவு மட்டும் 259 டி.எம்.சி.க்கு மேல் இருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதுபோன்ற நிலையைத் தவிர்க்கத்தான், 2006-2011ல் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மாநிலத்திற்குள் ஓடும் நதி நீர் இணைப்புத் திட்டங்களை வடிவமைத்து முதலில் காவிரி- குண்டாறு நதி நீர் இணைப்பு, பிறகு தாமிரபரணி- நம்பியாறு நதி நீர் இணைப்பு போன்ற தொலை நோக்குத் திட்டங்களை துவக்கி செயல்படுத்தினார்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், ராமநாதபுரம் காவேரி குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் என்று பல்வேறு குடிநீர் திட்டங்களை செயல்படுத்தினார் தலைவர் கலைஞர். அத்தகைய நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தயக்கம் காட்டி-முடக்கிப்போடுவதே அ.தி.மு.க அரசின் வழக்கமாக இருந்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை காட்டாத அதிமுக அரசின் நடவடிக்கைக்காக காத்திருந்தால் இனி பலனில்லை என்பது மட்டுமல்ல- விவசாயிகளும், பொதுமக்களும் படும் இன்னல்களை தீர்க்க வேறு வழியில்லை என்ற நிலையில், "நமக்கு நாமே" என்ற முறையில், நமது தமிழக மக்களின் தாகம் போக்கவும், தமிழகத்தில் வறண்டு கிடக்கும் வயல்களின் வயிறு நிறையவும், அதன் காரணமாக விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்கவும் கருதி சென்னை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியத்தின் சீரிய முயற்சியில் சைதாப்பேட்டையில் நேற்று (7-5-2017) கோதண்டராம கோவில் குளத்தைத் தூர் வாரும் பணியைத் தொடங்கினேன்.
வெட்டி வா என்றால் கட்டி வரும் ஆற்றல் மிக்கவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் என்பதை உங்களில் ஒருவனாகக் களம் காணும் நான் அறிவேன். தமிழகத்தில் ஆங்காங்கு உள்ள குட்டைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாத்திடவும் கழகத்தினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்.
மாவட்டக் கழகச் செயலாளர்களில் தொடங்கி நகர-ஒன்றிய-பேரூர்-கிளைச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் பொதுநல அமைப்புகளுடன் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் இணைத்து, உரிய அனுமதியினைப் பெற்று இத்தகையப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சொல்லால் அரசுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையைவிட, இந்த செயல் கடும் எச்சரிக்கையாக அமையட்டும் அ.தி.மு.க. அரசுக்கு! தண்ணீரைக் காத்து, தலைமுறையைக் காக்கும் பணியில் இன்றே-இப்போதே களம் காண்பீர். தமிழகம் காப்பீர்" என குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.