கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 100,000 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில், 94.4 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட இந்த ஆண்டும் அதிகமாக உள்ளது. இதில் மாணவர்கள் 92.5 சதவீத தேர்சியும், மாணவிகள் 96.2 தேர்சியும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதியவர்களில் 94.4 சதவீதம் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் சமச்சீர் கல்வியால் மாணவ மாணவிகள் கல்வியில் மாபெரும் புரட்சி செய்து வருகிறார்கள் என்பது ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெளிப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் கல்லூரி கல்விக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து எதிர்காலத்தில் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் உழைக்கும் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, நல்ல நிர்வாகிகளாக உருவாக வேண்டும் என்று வாழ்த்தி, தேர்வில் தோல்வியடைந்தவர்களும் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் மேல்படிப்பை தொடருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.