எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் : கோட்டைவிட்ட உளவுத்துறை

வீடியோ வெளிவந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையெல்லாம் கணித்து அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கு சொல்ல வேண்டியது உளவுத்துறையின் கடமை.

எம்.எல்.ஏக்கள் விலை பேசப்பட்ட விவகாரம் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உளவுத்துறை கோட்டைவிட்டு விட்டதாக காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த பல்வேறு பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி முதல்வரானதும் ஒன்று. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்க கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்ததும், அவர்களை சரியாக கவனித்து சட்டசபை வரை கொண்டுவந்ததும் நடந்தது.

ஆட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற்று கடும் அமளிக்கிடையே எடப்பாடி முதல்வர் ஆனதும் நடந்தது. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியதாக மு.க.ஸ்டாலின் , ஓ.பி.எஸ் முதலானோர் குற்றம் சாட்டினர். திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் கூவத்தூரிலிருந்து தப்பி ஓபி.எஸ் அணியில் இணைந்த மதுரை தெற்கு எம்.எல்.ஏ சரவணன் ஒரு வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மனம் திறந்து பணப்பறிமாற்றம் குறித்து பேசியதாக வீடியோ ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சரவணன் மட்டுமல்ல எடப்பாடி அணியில் இருக்கும் சூளூர் எம்.எல்.ஏ கனகராஜும் பேசியுள்ளது, அதிமுகவின் இரண்டு தரப்பையும் பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இதில் அதிகம் பிரச்சனையை சந்திப்பது ஆளும் எடப்பாடி அணிதான்.

உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து இந்திய அளவில் தமிழகத்தின் மானம் கப்பலேறியுள்ளது. என்னதான் போலி என மறுத்தாலும் ஊர் நம்ப தயாராக இல்லை.

இந்த வீடியோ பின்னனியில் உளவுத்துறையின் செயலின்மை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. பொதுவாக உளவுத்துறை அனைத்தையும் சமாளிக்கும் ஒரு மிகப்பெரிய முதுகெலும்பு போல் ஒரு அரசுக்கு இருக்கும். மிகத்திறமையான அதிகாரிகள் உளவுத்துறைக்கு தங்கள் பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.

மோகன்தாஸ் , ஆர்.வி. கோபால் , அலெக்சாண்டர் , ராமானுஜம் , ஜாபர் சேட் , சங்கர் ஜூவால் , அம்ரேஷ் புஜாரி போன்றோர் அவர்களுக்கு இடப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செயல்படுத்தினார்கள்.

தைரியமான அதிகாரிகளுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் உற்சாகமாக செயல்பட்டனர். ஆனால் தற்போது அப்படி ஒரு நடைமுறை இல்லை எனபது இந்த விவகாரத்தில் வெளிப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைதேர்தல் நேரத்தில் ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ , முதலில் சம்பந்தப்பட்ட தரப்புக்கு கொண்டுவரப்பட்டு பேரம் பேசப்பட்டதாகவும் பின்னர் பேரம் படியாததால் சானல் பக்கம் ஒதுங்கியதாக பரவலாக தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றி ஓய்வு பெற்ற ஒரு காவல் உயர் அதிகாரியிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

இப்படிப்பட்ட வீடியோவை எடுத்துள்ளனர் என்ற விபரத்தை உளவுத்துறை அறிந்திருக்கும். அதன் பின்னர் அதை தூக்கிக்கொண்டு அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் யாரை பார்க்கிறார்கள். அதன் பின்னனி என்ன, வீடியோ வெளிவந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதையெல்லாம் கணித்து அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சொல்வதும் , அதற்கான தீர்வை செய்வதும் அல்லது இப்படி செய்யலாம் என ரிப்போர்ட் போடுவதும் உளவுத்துறையின் பணி.

அதிலும் தேசிய தொலைக்காட்சிக்கு வீடியோ காட்சிகள் செல்லும் அளவுக்கு வேடிக்கை பார்த்த உளவுத்துறையின் செயல்பாடு குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

உளவுத்துறையில் உள்ள பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: முன்பு இருந்த உயர் அதிகாரிகள் உளவுத்துறைக்கு தேவையான வசதிகளை செய்து தந்தனர். கீழே இருக்கும் அதிகாரிகளும் அர்பணிப்புடன் செயல்பட்டனர். ஆனால் தற்போது சாதாரண வாகன வசதிகள் கூட உளவுத்துறை அதிகாரிகளுக்கு இல்லை. உளவுத்துறைக்கு என்று ஆட்டோ மற்றும் வேறு வகை வாகனங்கள் இருக்கும்.
இப்ப ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கூட வழி இல்லை. இப்படி இருந்தால் என்ன செயல்பட முடியும் என்று வருத்ததுடன் கேட்டார் அந்த அதிகாரி. உளவுத்துறை தற்போது இருக்கும் நிலைமைக்கு வீடியோ விவகாரமே சாட்சி. இனியாவது இதை உணர்ந்தால் சரி என்று தெரிவித்தார் அவர். அதையே வழிமொழிந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close