/indian-express-tamil/media/media_files/2025/10/23/dmk-mla-ponnusamy-2025-10-23-08-34-33.jpg)
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் பொன்னுசாமி (74) இன்று (அக்டோபர் 23, வியாழக்கிழமை) மாரடைப்பு காரணமாக காலமானார். இவருடைய மறைவு நாமக்கல் மாவட்ட திமுகவினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொல்லிமலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொல்லிமலையிலிருந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மற்றும் மக்கள் பணிப் பயணம்:
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய நடப்பு எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்து வந்தார்.
இதற்கு முன்பாக, 2006 முதல் 2011 வரையும் அவர் திமுக சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
அவர் தனது அரசியல் பயணத்தை அதிமுகவில் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திமுகவில் இணைந்து, உடனடியாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011, 2016 தேர்தலில் திமுக சார்பில் சேந்தமங்கலம் தொகுதியில்போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
சேந்தமங்கலம் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால், அவர் மலைவாழ் மக்களின் பிரதிநிதியாகத் தொடர்ந்து செயல்பட்டார். மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருந்தாலும், மலைவாழ் மக்களின் சாலை வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
கொல்லிமலை சோழக்காடு பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்த அவர், எளிதில் அணுகக்கூடிய மனிதராகவும், சாதாரண எளிமையான மனிதராகவும் அறியப்பட்டார்.
மலைவாழ் மக்களின் முகமாக அறியப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமியின் திடீர் மறைவு, நாமக்கல் மாவட்ட மக்களுக்கும் திமுகவினருக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us