சட்டப்பேரவை உறுப்பினருக்காக உயர்த்தப்பட்டுள்ள தனது ஊதியத்தை கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளானா நேற்று, விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டார். அதில், முக்கியமாக எம்எல்ஏ-க்களின் ஊதியம் ரூ.55,000-லிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இந்த ஊதிய உயர்வு அறிவிப்பானது பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெடுவாசல், கதிராமங்கலம், வறட்சி, விவசாயிகள் பிரச்னை, மாநிலத்தின் நிதி நிலைமை உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு 90 சதவீத ஊதிய உயர்வு தேவை தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினருக்காக உயர்த்தப்பட்டுள்ள தனது ஊதியத்தை கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழக எம்எல்ஏ-க்களின் ஊதிய உயர்வு இரு மடங்காக உயர்த்தப்படும் என்ற அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தலைவர் காமராஜரின் இலவச கல்வி திட்டத்தில் பயின்று முன்னேறிய நான் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது பெற்ற ஊதியத்தை பல கிராமங்களில் இலவச டியூசன் சென்டர் ஆரம்பித்ததோடு, ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்திற்காக வழங்கி செலவு செய்தேன்.
கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினராகும் வாய்ப்ப்பை இழந்தாலும், மாதந்தோறும் அந்த தொகையை செலவு செய்து இலவச டியூசன் சென்டர்களையும், கல்வி உதவி தொகையையும் தொடர்ந்து வழங்கி வருகிறேன்.
இப்பொழுது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், மேலும் பல கிராமங்களில் டியூசன் சென்டர்களை துவங்கி, கல்வி உதவி தொகையை மேலும் பலருக்கு வழங்கி கல்வி வளர்ச்சிப்பணியை இரு மடங்காக உயர்த்துவேன் என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.