தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த நவம்பர் மாதம் உடல் நல குறைவால் இறந்து போனார். இடைக்கால முதல்வராக ஓபிஎஸ் இருந்தார். முதல்வர் பதவியில் இருந்து ஓபிஎஸ் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி ஓபிஎஸ் ஜெ. சமாதியில் தியானம் செய்து புரட்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஓர் அணியும் உருவானது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பஸ்களில் ஏற்றி கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சசிகலா அணியில் இருந்த மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. தப்பித்து வந்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அவருடன் டைம்ஸ் நவ் நிருபர் பேசும் ரகசிய வீடியோவை அந்த சேனல் இன்று மாலை வெளியிட்டது. அதில் எம்.எல்.ஏ. சரவணன், ‘சசிகலா அணியில் இணைவதற்கு முதலில் ஆறு கோடி ரூபாய் தருவதாக சொன்னார்கள். கருணாஸ், பெ.தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் தலா பத்து கோடி வாங்கினார்கள்.
மேலும் ஓபிஎஸ் அணியில் இணைய ஒரு கோடி ரூபாயும், சசிகலா அணியில் இணைய இரண்டு கோடி ரூபாயும் பேரம் பேசப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சொல்லியுள்ளது.
எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.